தன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஆட்டோ ஓட்டுநர் ஏற்படுத்திய நிகழ்வை நடிகர் மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டதை பற்றி காணலாம். 


ரேடியோ ஜாக்கியாக தன் கலையுலக வாழ்க்கையை தொடங்கிய மணிகண்டன் நடிகராக 2013 ஆம் ஆண்டு வெளியான பீட்சா 2 தி வில்லா படம் மூலம் அறிமுகமானார். பல படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்து வந்த மணிகண்டன், ஜெய் பீம் படத்தின் கதையின் நாயகனாக நடித்து மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து சில நேரங்களில் சில மனிதர்கள், குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 


தொடர்ந்து அடுத்தடுத்து பெயரிடப்படாத படங்களில் நடித்து வரும் மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் பற்றி பேசினார். அதில், “நான் ஒரு இடத்துல வேலை செஞ்சிட்டு இருக்கேன். எனக்கு அந்த சமயத்துல சுத்தமா வாழ்க்கையே பிடிக்கல. வேலை செய்யுற இடமும் பிடிக்கல. மன அழுத்தத்தின் உச்சத்தில் இருக்கிறேன். அப்படியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் ஒருநாள் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். அந்த ஆட்டோவின் ஓட்டுநர் அண்ணன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.


அவர் என்னிடம், ‘எங்க சார் வேலை பார்க்குறீங்க?’ என கேட்க, நான் பதில் சொல்றேன். நான் திரும்பி அந்த அண்ணனிடம், ஆட்டோ ஓட்டுவதை பற்றி விசாரித்தேன். அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் என்னிடம், ‘எனக்கு ஆட்டோ ஓட்டுறது பிடிக்கல தான்.என் மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்பி விட்டேன். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு நிக்க மாட்டேங்குது. எங்க ஊருல எனக்கு நிலம் இருக்குது. அதுல கொஞ்சம் கீரை போடுவேன்.


பழைய மோட்டார் தான் இருக்குது. எனக்கு பம்புசெட் வாங்கணும்ன்னு தான் கனவு. அதற்காக தான் இரவு, பகலா ஆட்டம் ஓட்டிக்கிட்டு இருக்கேன். பம்பு செட் மட்டும் வாங்கிட்டேன்னா அடுத்த வருசத்துல இருந்து சூப்பராக மாறிடுவேன். என் குடும்பத்தோட ஜாலியா இருப்பேன்’ என சொன்னார். எனக்கு என்ன ஆச்சரியம்ன்னா எப்படிடா ஒரு மனுஷன் இவ்வளவு நம்பிக்கையோடு வாழ்றாரு. ஆனால் நான் வாழ்க்கையை பற்றி நிறைய புகார் சொல்றேன். அந்த மனிதர் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்” என மணிகண்டன் தெரிவித்திருந்தார். 




மேலும் படிக்க:  Actor Srideva: சினிமாவில் என்ட்ரியாகும் 'சிறகடிக்க ஆசை ' மனோஜ்... யாருக்கு ஜோடி தெரியுமா?