தமிழ் சினிமாவில் சமகாலத்தில் உள்ள ஆகச் சிறந்த கலைஞர்களை வரிசைப்படுத்தினால் அதில் நடிகர், இயக்குநர், வசன கர்த்தா, திரைக்கதை ஆசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்ற அவதாரங்களை எடுத்து வலம் வந்து கொண்டு உள்ள இளம் கலைஞர் மணிகண்டனுக்கு எப்போதும் இடம் உண்டு.


மணிகண்டன் ஒரு படத்தில் நடிக்க அல்லது பணிபுரிய ஒத்துக் கொள்கின்றார் என்றால் அந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கும். இவரது இயக்கத்தில் வெளியான நரை எழுதும் சுயசரிதம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவசங்கரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.


மணிகண்டன் ஒரு படத்தில் இருக்கின்றார் என தெரிந்து கொண்ட பின்னர் படத்தில் தானும் இணைந்து கொள்கின்றேன் என இணைந்து பணியாற்றும் சினிமாக்காரர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இப்படியான நிலையில் மணிகண்டன் நடிப்பில் அடுத்து உருவாகவிவரும் திரைப்படம் 'லவ்வர்’. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ஃபீல் குட் படம் என்றால் அது 'குட் நைட்’. இந்நிலையில் இவரது நடிப்பில் லவ்வர் என்ற படம் அடுத்ததாக உருவாகி வரும் செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் எற்படுத்தி உள்ளது. 


இதுவரை தான் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு மணிகண்டன் தற்போது முழுக்க முழுக்க காமெடி ரொமான்ஸ் கதைக்களத்தைக் கொண்ட லவ்வர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகின்றது. 






மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.  இந்த நிறுவனம்தான் குட் நைட் படத்தையும் தயாரித்தது. குட் நைட் படத்திற்கு இசையமைத்த ஷேன் ரோல்டன் இந்தப் படத்துக்கும் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார்.


ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான அனுபவத்தை கொடுக்க தயாராகுமாறு படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். சிம்பு வெளியிட்ட பின்னர், தொடர்ந்து சிம்புவிற்கு நன்றி தெரிவித்த நடிகர் மணிகண்டன், இந்தப் படம் தனக்கும் படக்குழுவினருக்கும் மிகவும் சிறப்பு மிக்கது என்றும் அதை சிம்பு மேலும் சிறப்பாக்கியுள்ளார் என்றும் கூறியுள்ளார். படத்திற்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. மணிகண்டனின் நண்பரும் குட்நைட் படத்தில் இணைந்து நடித்திருந்த ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும்  தங்களது சமூக வலைதளங்களில் மணிகண்டனை வாழ்த்தி வருகின்றனர்.