கமல்ஹாசன் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ’கமல்ஸ் பிளட் கம்யூன்’ என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.


திரையில் இருந்தாலும் தலைவர் தான்...


அதன் தொடக்க விழாவை இன்று காலை 11 மணியளவில், மநீம கட்சியின் தலைமை அலுவலகத்தில் மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 






அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ”மீண்டும் நடிக்க போய்விட்டேன் என்கிறார்கள், சிறையில் இருந்தால் தான் தலைவர் என்று இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான்.


படத்தின் வெற்றியைக் கொண்டாட நான் இங்கே வரவில்லை, இது ஒரு படிக்கட்டு. நான் அதில் ஏறி போய்க்கொண்டு இருக்கிறேன். 40 ஆண்டுகளாக இதை செய்து கொண்டிருக்கிறேன்.


வைராக்கியம் குறையவில்லை


என்னுடைய வைராக்கியம் குறையவில்லை, என் படங்களில் தொடர்ந்து அரசியல், சமூக சேவை குறித்த விஷயங்கள் வந்து கொண்டிருக்கும். என்ன நடிக்க விட்டீங்கனா நான் 300 கோடி சம்பாதிப்பேன் என்று சொன்னால் அவர் ஏதோ மார் தட்டுகிறார்னு சொன்னார்கள். இதோ இப்போ வந்து கொண்டு இருக்கிறது.


நான் என் கடனையெல்லாம் அடைப்பேன், என் சாப்பாட்டுக்கு வயிறாற சாப்பிடுவேன். என் உறவுகளுக்கு நண்பர்களுக்கு கொடுக்க முடிந்ததை கொடுப்பேன்.


 



அதற்குப் பிறகு இல்லையென்றால் இல்லை என்று சொல்லுவேன். எனக்கு வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை. மனிதனாக இருப்பது போதுமானது. இல்லாதபோது கொடுத்ததா சொல்லி எதுக்கு நடிக்கணும்.


இது தான் எங்கள் அரசியல்...


நன்றாக நடப்பவரை இடறிவிடுவது எங்கள் அரசியல் இல்லை. தடுக்கி விழுந்தால் தூசி தட்டி எழுந்துவிட்டு, தடுக்கி விட்டவரை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு எங்கள் வழியில் நாங்கள் போய்க்கொண்டே இருப்போம்” எனத் தெரிவித்தார்.


கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் படம் மூலம், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் இருந்து சினிமாவுக்கு கமல்ஹாசன் மீண்டும் திரும்பியுள்ளார். கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதுவும் செய்யாத சாதனையை இப்படம் நிகழ்த்தி வருகிறது.


300 கோடி கிளப்பில் இணைந்த விக்ரம் 


விக்ரம் படம் வெளியாகி 11 நாள்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படம் உலகம் முழுவதும் 310 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.




கோலிவுட் வரலாற்றில் இதுவரை 2.0 திரைப்படம் 508 கோடி ரூபாயும், எந்திரன் 218 கோடி ரூபாயும் அதிகபட்சமாக வசூலித்துள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து தற்போது அதிக வசூலை வாரிக்குவித்து வருகிறது.


மேலும், தென்னிந்தியாவில் 300 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்த மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், பிரபாஸ், விஜய், அல்லு அர்ஜூன், ராம் சரண், யாஷ் ஆகியோர் அடங்கிய பட்டியலில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.