25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார். 


தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநராக உள்ள த்ரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவை ‘குண்டூர் காரம்’ (Guntur Kaaram)என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்க,  மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


இதனிடையே மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தின் பிரமாண்டமான ப்ரீ ரிலீஸ் விழா நேற்று குண்டூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, “குண்டூரில் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது த்ரிவிக்ரமின் எண்ணமாக இருந்தது. த்ரிவிக்ரம் எனக்கு நண்பர் என்பதை விட அதிகம். அவர் என் குடும்ப உறுப்பினர் போன்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அளித்த ஆதரவையும் பலத்தையும் என்னால் மறக்க முடியாது.


அவரது படங்களில் எனது நடிப்பின் மேஜிக் என்பது இருக்கும். குண்டூர் காரத்திலும் அதனைக் காணலாம். கண்டிப்பாக குண்டூர் காரம் படத்தில் புதிய மகேஷ் பாபுவை நீங்கள் பார்ப்பீர்கள். அதற்கு த்ரிவிக்ரம் தான் காரணம். இந்த படத்தின் தயாரிப்பாளரான ராதா கிருஷ்ணாவுக்கு நான் மிகவும் பிடித்த ஹீரோ என்ற நிலையில் அவர் அளித்த ஆதரவு ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஒரு தெலுங்கு பெண்ணான (ஸ்ரீலீலா) டாப் ஹீரோயினாக மாறியதில் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இதுவரை பணிபுரிந்த நடிகைகளில் அவர் மிகவும் கடின உழைப்பாளிகளில் அவரும் ஒருவர்” என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய மகேஷ் பாபு, “எனக்கு ஸ்ரீ லீலாவுடன் நடனமாடுவது கடினமாக இருந்தது. மேலும் குண்டூர் காரத்தில் மீனாட்சி சௌத்ரி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் அவரை அணுகியபோது உடனடியாக மறுப்பேதும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். குண்டூர் காரம் படத்தின் இசையமைப்பாளர் தமன் எனக்கு அண்ணன் மாதிரி. எனக்கு தெரிந்து எந்த இசையமைப்பாளரும் குறிச்சி பாடலைப் பற்றி பலமுறை விவாதித்திருக்க மாட்டார்கள். அந்த பாடலின் போது தியேட்டர்கள் தெறிக்கும்” என கூறினார்.


அதேசயம், “திரையுலகில் இது எனது 25வது ஆண்டு என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் மீதான உங்கள் அன்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. மேலும் சங்கராந்தி எனக்கு எப்பொழுதும் சாதகமாகவே இருந்து வருகிறது. இந்த வருடமும் பெரிய அளவில் குண்டூர் காரம் இருக்கும் என நம்புகிறேன். அப்பா ஒவ்வொரு முறையும் போன் செய்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைப் பற்றிச் சொல்வார். அந்தத் தொலைபேசி அழைப்புக்காக நான் காத்திருப்பேன். ஆனால் இப்போது என் தந்தை இல்லாததால், நீங்கள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல வேண்டும். உங்களைத்தான் நான் என் தந்தை, தாய் மற்றும் எல்லாமாக கருதுகிறேன்” என மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.