தமிழ் சினிமா ரசிகர்களால் மேடி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மாதவன் தன்னுடைய வசீகரமான அழகால் அன்று முதல் இன்று வரை ரசிகைகளின் ரோமியோவாக வலம் வருகிறார். இடைப்பட்ட காலத்தில் அதிக எடை கூடிய மாதவன் தன்னுடைய உடல் எடையை அதிரடியாக 21 நாளில் குறைத்துள்ளார். அது எப்படி என  அவரே கூறியுள்ளார். அந்த தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 




இந்தி சின்னத்திரையில் இருந்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமான மாதவன், மணிரத்னம் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கிளீன் போல்ட் செய்துவிட்டார். அதன் தொடர்ச்சியாக மின்னலே, ரன், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பால் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றார். 


இடையில் சிறிது காலம் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட மாதவன் 'இறுதி சுற்று' படம் மூலம் ஒரு மாஸான கம்பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து வெளியான விக்ரம் வேதா, மாறா உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கோணத்தை வெளிப்படுத்திய மாதவன் திடீரென இயக்குனராக 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படம் மூலம் இயக்குநரானார். 


'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாதவன் அந்த கேரக்டருக்காக உடல் எடை அதிகரித்து இருந்தார். அந்த படத்திற்கு பிறகும் அவரின் எடை அதிகமாக இருந்ததால் உடல் எடையை அதிரடியாக குறைக்க முடிவெடுத்துள்ளார். அதன் படி 21 நாட்களில் உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்து தெரிவித்துள்ளார். 




உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஜிம்முக்கு போய் கடுமையாக உடற்பயிற்சி செய்வது போல எல்லாம் நான் எந்த ஒர்க் அவுட்டும் செய்யவில்லை. நான் சாப்பிடும் உணவை நன்கு மென்று ரசித்து சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன்.


மாலை 6:45 மணிக்கே இரவு உணவை சாப்பிட்டு முடித்துவிடுவேன். அதிகாலையில் 90 நிமிடங்களும், இரவு தூங்குவதற்கு முன்னும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்வேன். இயற்கையான உணவுகளையும் மட்டுமே 21 நாட்களுக்கு எடுத்துக்கொண்டேன். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்த்துவிட்டேன். அப்படி தான் என் உடல் எடையை குறைத்தேன் என தெரிவித்துள்ளார் நடிகர் மாதவன். மீண்டும் அவரின் இந்த ஸ்லிம் லுக் ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.