தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கதை சொல்லுவதில் மாஸ்டர் என நடிகர் மாதவன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வந்தது. அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் என பலர் நடித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
1990களில் காஷ்மீரில் இருந்த பண்டிட்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே ஏற்பட்ட மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில், பண்டிட்கள் காஷ்மீரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
கோவாவில் நடந்த 53அது சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியிடப்பட்டது. அப்போது, இந்த படம் வெறுப்புணர்வை தூண்டுவதாக விழாவின் தேர்வுக்குழு தலைவர் கூறியது சர்ச்சையானது. எனினும், வட இந்தியாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த வாரம் நடைபெற்ற 69வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியலில் தேசிய ஒருமைப்பாட்டை கூறும் படமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இருப்பதாக கூறி, சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
தேசிய திரைப்பட விருதை பெற்றதால் படத்தின் இயக்குநர் அக்னிஹோத்ரியை பலரும் பாராட்டினர். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து ’தி வேக்ஸின் வார்’ என்ற திரைப்படத்தையும் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி உள்ளார். கொரோனாவிற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கையும், கொரோனா தடுப்பூசியில் இந்தியாவின் வேகத்தையும் கூறும் விதமாக தி வேக்ஸின் வார் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் அடுத்த மாதம் 28ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், தி வாக்ஸின் வார் திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அப்பொழுது படத்தை பார்த்த நடிகர் மாதவன், ”கொரோனா என்ற சவாலான பேரிடர் காலத்தில் தடுப்பூசிய உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகளின் தியாகமும், சாதனைகளும் வியப்படைய செய்தது. ஒரு கதையை சொல்வதில் மாஸ்டராக இருக்கும் விவேக் அக்னிஹோத்ரி இந்த கதையை இயக்கியுள்ளார். அவரால் ஒரே நேரத்தில் உங்களை உற்சாகப்படுத்தவும், கைத்தட்டவும், அழ வைக்கவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முடியும். தி வாக்ஸின் வார் படத்தை திரைக்கு சென்று பாருங்கள். கொரோனா காலத்தில் உங்களுக்கு உதவிய பெண்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மீதும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், மாதவனின் இந்தப் பதிவு இணையத்தில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
“இது ஒரு பிரச்சாரப் படம், மாதவனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை”, “நாங்கள் உங்களை திரையில் ரசித்து வளர்ந்தோம், இப்படி செய்யாதீர்கள்” என்றெல்லாம் இந்தப் பதிவின் கமெண்ட் செக்ஷனில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Fahadh Faasil: ரஜினிக்கு வில்லனான ‘ரத்னவேலு’ ஃபஹத்...சம்பளம் இத்தனை கோடிகளா....அதிர்ச்சியில் கோலிவுட்!