தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளை கடந்து இன்றும் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் மாதவன். தமிழ் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் ஏராளமான ரசிகர்களை கொண்ட மேடி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய மாதவனுக்கு முதல் படமே அனைவரும் விரும்பும் ஒரு இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'அலைபாயுதே' படத்தில் அறிமுகமான உடனே இளம் பெண்களின் ரோமியோவாக கொண்டாடப்பட்டார். அதை தொடர்ந்து 'மின்னலே', டும் டும் டும் உள்ளிட்ட படங்களில் காதலில் உருகி உருகி நடித்து ரசிகைகளையும் உருக வைத்தார். தன்னை ஒரு காதல் மன்னனாகவே முத்திரை குத்திவிட கூடாது என 'ரன்' திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் களம் இறங்கினார். செகண்ட் ஹீரோவாக நடிக்க கூட தயங்காத மாதவன் 'அன்பே சிவம்' திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போனதும் அழுத்தமான நடிப்பை பதிய வைத்தார்.
ஒரு ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கும் வயதில் ஒரு பத்து வயது குழந்தையின் தந்தையாக 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் மூலம் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார். நெகட்டிவ் கதாபாத்திரங்களும் எனக்கு அத்துபுடி தான் என்பதை 'ஆய்த எழுத்து' மூலம் நிரூபித்து காட்டினார். எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய திறமையான நடிப்பை 100 சதவீதம் கொடுத்து பாராட்டுகளை குவித்து விடுவார். எத்தனை வெரைட்டியான கேரக்டர்களில் பல பரிணாமங்களை வெளிக்காட்டி நடித்தாலும் இன்றும் 'மேடி' மாதவன் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவு கடந்த கிரேஸ் கொஞ்சமும் குறையவில்லை.
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் ரங்தே பசந்தி, 3 இடியட்ஸ், மும்பை மேரி ஜான் என ஒரு கலக்கு கலக்கிய மாதவன் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகரானார். ஒரு சிறிய பிரேக்குக்கு பிறகு 'இறுதிச்சுற்று' திரைப்படம் மூலம் அசத்தலான ரீ என்ட்ரி கொடுத்து தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை படு ஜோராக துவங்கினார். அதை தொடர்ந்து விஞ்ஞானி நம்பிராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவரே இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்தின் மூலம் அவர் இந்திய அளவில் பாராட்டுகளை குவித்ததுடன் தேசிய விருதையும் பெற்றார். ஒரு சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
அதே போல இந்தியிலும் 'சாலா கதூஸ்' என்ற வெற்றி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் மாதவன். அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றாலும் தன்னுடைய வயதிற்கு தகுந்த கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் 'ஷைத்தான்' திரைப்படம் வெளியானது.
நடிப்பு உலகில் மட்டும் சிறந்து விளங்காமல் தன்னம்பிக்கை வளர்க்கும் சில பயிற்சிகளை வழங்குவதுடன் சிறந்த பேச்சாளராகவும் சர்வதேச அளவில் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பன்முக திறமையாளராக கலக்கி வருகிறார் மாதவன். ஹேப்பி பர்த்டே மாதவன்