ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் வாழ்ந்து வந்த ஒரு தமிழ் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் மாதவன்(Madhavan). இந்தி மற்றும் தமிழில் சரளமாக பேசக்கூடியவராக இருந்ததால் இந்தி தொலைக்காட்சி தொடரில் மிகவும் பிரபலமான நடிகராக நடித்து வந்தார். சந்தோஷ் சிவனின் சாண்டல் வுட் டால்க் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் 'இருவர்' படத்திற்கு ஆடிஷன் செய்ய அழைப்பு வந்துள்ளது. அந்த சமயத்தில் இயக்குனர் மணிரத்தினம் இவர் அந்த கதாபாத்திரத்துக்கு செட்டாக மாட்டார் என அனுப்பியவரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவரே அழைத்து கொடுத்த வாய்ப்பு தான் 'அலைபாயுதே'.
நேர்த்தியாக பொருந்தக்கூடியவர்:
'அலைபாயுதே' படத்தில் தொடங்கிய மாதவனின் பயணம் அவரை வெற்றி நாயகனாக கொண்டாட வைத்தது. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக ரசிகைகள் நெஞ்சினில் குடி கொண்டார். காதல் நாயகன் என்ற வட்டத்துக்குள் அடங்கி விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த மாதவனுக்கு அடுத்ததாக ஆக்ஷன் ஜானரில் கிடைத்த படம் தான் 'ரன்'. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அப்பாவாக நடித்து அப்லாஸ் அள்ளினார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக நேர்த்தியாக பொருந்தி நடிக்க முடியும் என்பதை அன்பே சிவம், ஆய்த எழுத்து உள்ளிட்ட பாடங்களின் மூலம் நிரூபித்தார். அந்த ஆட்டிடியூட் தான் அவரை தென்னிந்திய சினிமா கொண்டாடியதற்கு காரணம்.
ரீ என்ட்ரியிலும் மாஸ் காட்டிய மேடி:
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவில் கால்பதித்த மாதவனுக்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக உயரத்தில் கொண்டு சேர்த்தது. அவர் நடித்த 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி மற்றும் தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. இரு மொழிகளில் வெளியான 'இறுதிச்சுற்று' படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக வெகு சிறப்பாக நடித்து ரசிகர்களை பாராட்டுகளை குவித்தார். ஒரு பிரேக்குக்கு பிறகு அவர் மாறுபட்ட தோற்றத்தில் நடித்த இப்படம் சிறந்த ரீ என்ட்ரி படமாக அமைந்தது.
இமேஜ் பார்க்காதவர்:
ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் பெரும்பாலான படங்கள் அனைத்துமே வெற்றி படமாக அமைந்ததற்கு முக்கியமான காரணம் அவரின் நேர்த்தியான பட தேர்வு தான். இமேஜ் பார்க்காமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள், தனது வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பது அவரின் அந்தஸ்தை ஒரு படி உயர்த்தியுள்ளது.
விக்ரம் வேதா, மாறா உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பும் தோற்றமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. போலியான குற்றச்சாட்டுகளால் தண்டிக்கப்பட்டு முழுவதுமாக வாழ்க்கையை இழந்த ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி தயாரித்து தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டு பாராட்டுகளை குவித்தார்.
என்றும் ரசிகைகளின் சாக்லேட் பாய் :
அலைபாயுதே படத்தில் அவருக்கு எந்த அளவிற்கு கிரேஸ் ரசிகர்களின் மத்தியில் இருந்ததோ அதில் சற்றும் குறைவில்லாமல் இன்றும் அதே பிரியத்துடன் இளைஞனாகவே மாதவனை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். என்றும் ட்ரீம் பாயாக இருக்கும் மேடியின் 53வது பிறந்தநாள் இன்று. இந்த பன்முக திறமையாளர் மேலும் பல வெற்றிகளை குவிக்க மனதார வாழ்த்துவோம்.