ஃப்ரண்ட்ஸ்


மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஃப்ரண்ட்ஸ் படம் வெளியானது. விஜய், சூர்யா, வடிவேலு, தெவயானி, விஜயலட்சுமி, ரமேஷ் கன்னா, ராதா ரவி, மதன் பாப், சார்லீ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.  ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் வடிவேலு  நடித்த  நேசமணி கதாபாத்திரம் வடிவேலுவின் ட்ரேட் மார்க் கதாபாத்திரங்களில் ஒன்று. கடத்தல்காரர்களை துரத்தும் காட்சி, தலையில் சுத்தியல் விழும் காட்சி, கடிகாரத்தை உடைக்கும் காட்சி என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கின்றன.


இது எல்லாவற்றையும் விட ஃப்ரண்ட்ஸ் படத்தில் அனைவருக்கும் பிடித்த காட்சி என்றால் வடிவேலு தலையில் கரி விழ அதற்கு விஜய் சிரிக்கும் காட்சி தான். ஃப்ரண்ட்ஸ் படத்தில் சுந்தரேசா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மதன் பாப் இந்த காட்சி எடுக்கப் பட்ட விதம் குறித்தும் ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


சீரியஸாக எடுக்கப்பட்ட காமெடி சீன்


வடிவேலு ஒரு பீப்பாய்க்குள் தலைகீழாக விழுந்துவிட அவரை கவிழ்க்கும்போது அவரது தலையில் கரி கொட்டப்படும். அப்போது சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்.  விஜய் , சூர்யா, ராதாரவி, மதன் பாப், ரமேஷ் கன்னா, சார்லீ இன்னும் பல நடிகர்கள் இந்த காட்சியில் வரிசையாக சிரித்து முடித்து அமைதியாகிவிட விஜய் மட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் தனியாக சிரித்துக் கொண்டிருப்பார். இந்த காட்சியை பார்க்கும் நாமும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்குகிறோம் .ஆனால் இந்த காட்சி எடுக்கப்பட்ட விதம் பற்றி மதன் பாப் தெரிவித்துள்ளது  அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. “அந்த காட்சியில் நான் சிரிப்பதை தனியாக படம்பிடித்தார்கள். வடிவேலுவை தனியாக எடுத்தார்கள். விஜய் சூர்யா சிரிப்பது தனியாக படம்பிடிக்கப்பட்டது. ராதா ரவி சிரிப்பது தனியாகவும் தேவயானி சிரிப்பது தனியாகவும் எடுக்கப்பட்டது. இப்படி தனித்தனியாக எடுக்கப்பட்டு மொத்தமாக சேர்க்கப்பட்டதுதான் இந்த காட்சி. பொதுவாக காமெடி காட்சிகளை அவ்வளவு சிரத்தை எடுத்து எடுக்க மாட்டார்கள். ஆனால் சீரியஸாக எடுக்கப்பட்ட காமெடி சீன் தான் இந்த காட்சி “ என்று மதன் பாப் கூறியுள்ளார்.


வடிவேலு நிஜமாகவே விழுந்தார்


”இந்தப் படத்தில்   நேசமணியின் கதாபாத்திரம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக வடிவேலு நிறைய கஷ்டப்பட்டார். எண்ணெயில் வழுக்கி விழும் காட்சியில்  நடிக்கும்போதெல்லாம் வடிவேலு நிஜமாகவே கீழே விழுவார். பொதுவாக இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும் போது அவர் நிஜமாகவே விழுந்துதான் நடிப்பார். ஃப்ரண்டஸ் படத்தின்போது வடிவேலு காலில் நிஜமாகவே காயம்பட்டிருந்தது. சுந்தர் சி இயக்கத்தில் பிரஷாந்துடன் அவர் வின்னர் படம் நடிக்கும்போது அவர் மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அதையே அவர் அந்தப் படத்தில் அவர் நடக்கும் விதமாக மாற்றிக்கொண்டார்“ என்று மதன் பாப் கூறியுள்ளார்.