தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக அனுபவம் மிக்க நடிகராக இருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். கொடுக்கும் கதாபாத்திரம் காமெடியாக இருந்தாலும் சரி , சீரியஸாக இருந்தாலும் சரி ..கொடுக்கப்பட்ட கதாபாத்திராத்திற்கு தன்னால் இயன்ற அத்தனை நியாயத்தையும் செய்துவிடுவார். ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த எம்.எஸ்.பாஸ்கர் , சின்ன பாப்பா பெரிய பாப்பா என்னும் நெடுந்தொடரில் பட்டாபி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகருக்கான அந்தஸ்தையும் பெற்றார். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கும் எம்.எஸ்,பாஸ்கர் தனது திரைத்துறை அனுபவம் குறித்து நடிகர் சித்ரா லக்‌ஷ்மணன் உடனான நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.







அதில் “ஆரம்பத்தில் நான் ரெப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தேன். சினிமாவில் நடிக்க வரவில்லை என்றால் நான் அந்த துறையில் அடுத்தடுத்து முன்னேறியிருப்பேன். உலகத்தில் நிறைய வேலை இருக்கு. ஏதாவது செய்திருப்பேன். ஆரம்பத்தில் டப்பிங்கில் ஓரிரு வரிகளை பேசி எனது சினிமா பயணத்தை தொடர்ந்தேன். அதன் பிறகு இதன் மீது மிகப்பெரிய ஈடுபாடு வர தொடங்கிவிட்டது. டிவி நாடகங்கள் , ரேடியோ நாடகங்கள் என ஆரமித்துதான் இப்படி வந்துட்டேன்.எனக்கு திரையில் நடிக்க வாய்ப்பு தந்த முதல் நடிகர் விசு அண்ணாதான்.அதற்கு முன்னதாக துரை சார் புனித மலர் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.ஆனால் அந்த திரைப்படம் ஏதோ காரணத்தால் வெளியாகவில்லை.திருமதி ஒரு வெகுமதி .காவலன் அவன் கோவலன் இப்படி அடுத்தடுத்த படங்களில் விசு அண்ணாதான் வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு எனக்கு பெரிதாக வாய்ப்பு வரவில்லை.அதன் பிறகு நிறைய டப்பிங் பேசினேன். அதன் பிறகு சீரியல் வாய்ப்பு வந்தது. சின்ன வாய்ப்பாக வந்தது. நடிப்பை பார்த்து சீரியல் முழுக்க  நடிக்க வச்சுட்டாங்க. அதன் பிறகு சின்னபாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடிக்க வந்த வாய்ப்பு வேறு ஒருவர் நடிக்க வேண்டியது. அவர் 6 மணிக்கு மேலத்தான் நடிப்பேன்னு சொன்னதால என்னை கூப்பிட்டாங்க. அந்த சீரியலில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது ” என்றார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்