பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் ஆதரவு குரல் கொடுத்துள்ளார் நடிகர் கிஷோர்.


டி.எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது:


டி. எம்.கிருஷ்ணாவின் இசை ஆளுமையை கெளரவிக்கும் வகையில் மெட்ராஸ் மியூசிக் அகாடமி அவருக்கு சங்கீத கலாநிதி விருது கடந்த மார்ச் 18 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ரஞ்சனி காயத்ரி உள்ளிட்ட மூத்த கர்நாடக இசைக் கலைஞர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.


சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார்கள். டி.எம் கிருஷ்ணா பெரியார் போன்ற ஒரு தலைவரின் கொள்கைகளை பின்பற்றுபவர் என்பதால் அவருக்கு இந்த விருது வழங்குவது சங்கீத அகாடமியின் பன்பாட்டிற்கு கலங்கம் ஏற்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறினார்கள்.


டி. எம் கிருஷ்ணாவுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு


இதனைத் தொடர்ந்து டி. எம் கிருஷ்ணாவுக்கு பிற திரையிசைப் பாடகர்கள், இலக்கியவாதிகள், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள். தற்போது நடிகர் கிஷோர் டி.எம் கிருஷ்ணாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தவர்களின் உயர் சாதி மனப்பாண்மையை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


வரலாறை மறப்பவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது - அம்பேத்கர்


அம்பேத்கரின் வாசகத்தில் தொடங்கிய கிஷோர் இப்படி கூறியுள்ளார் " ஒரு மனிதன் அவனது குணங்களின் அடிப்படையில் நல்லவன் என்று கருதப்படுகிறான். அவனது பிறப்பினாலோ மண்டையில் இருக்கும் குடுமியின் அடிப்படையில் இல்லை. டி.எம் கிருஷ்ணாவுக்கு இந்த விருது அறிவித்ததை வேதப் பாடகர்கள் ஏன் இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். இசையில் பல பரிச்சார்த்தமான முயற்சிகளை அவர் முன்னெடுத்த காரணத்தினாலா ? அல்லது பெரியாரின் கொள்கைகளை அவர் தனது சித்தாந்தமாக கருதுவதனாலா?


வேதங்களை பின்பற்றுபவர்கள் தலித்களுக்கு எதிராக செய்த ஒடுக்குமுறைகளுக்கு எதிர்க்குரல் கொடுக்கத்தானே பெரியாரின் கொள்கைகள் உருவாகின. வேத மரபினர் கடைபிடித்த ஒடுக்குமுறைகளை பின்பற்றித்தானே பிற உயர் சாதியினர் தலித்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை செய்யத் தூண்டப்பட்டார்கள். உயர் சாதியினரின் மலத்தை தலையில் தூக்கி சுமக்கும் நிலைக்கும் , பிற சாதியினர் தலித்களின் மேல் சிறுநீர் கழிக்க தூண்டுகோளாக அமைந்ததும் இதே வேதங்கள் தான் என்பதை மறுக்க முடியுமா?





புனிதம் என்கிற பெயரில் பலநூறு ஆண்டுகளாக நாங்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப் படாமல் வாசலில் நிற்கவில்லையா. நாங்கள் பூணூல் அணிந்திருக்கிறோமா? இல்லையா? என்பதை காட்ட சட்டை இல்லாமல் நடக்க நிர்பந்தப்படுத்தப் படவில்லையா? பல நூறு ஆண்டுகால ஒடுக்குமுறைக்குப் பின் ஒடுக்கப்பட்டோர் இன்னும் தங்களது குரலை எழுப்பமுடியாத நிலை நீடிக்கும் அநாகரிகமான சமூகமாக நாம் இருக்கிறோம். சமூகத்தின் கீழ்மைகளை நிலையை பிரதிபலிக்கவும் சீரமைக்கும் முயற்சியாக இசையை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது. இசையின்மேல் புனிதத்துவத்தை பூசி தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். இது ஒரு வகையில் வர்ணாசிரம கொள்கைகளை திணிக்கும் முயற்சியே."


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.