ஜி.வி பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள கள்வன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து இயக்குநர் லிங்குசாமி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்

Continues below advertisement


ஜி.வி பிரகாஷ் 


இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக அடுத்தடுத்தப் படங்களை ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ரெபல் படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படியான நிலையில் ஜி.வி நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. 


கள்வன்


பி.வி ஷங்கர் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் கள்வன். இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷ் , பாரதிராஜா , இவானா, தீனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்கள் முன்பு இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. காடுகள் , யானை என ஆக்‌ஷன் த்ரில்லர் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகி இருக்கிறது கள்வன் படம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ஜி.வி பிரகாஷின் நடிப்பை பாராட்டி பேசினார்.


பொல்லாதவன் தனுஷ் மாதிரி நடிக்கிறார்


 நிகழ்ச்சியில் பேசிய லிங்குசாமி “ இதற்கு முன்பு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் ஜி.வி பிரகாஷ் படத்தில் நடிக்கலாம் என்று சொன்ன ஞாபகம் எனக்கு இருக்கிறது. அப்படி சொல்லி அவரது ரூட்டை மாற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் ஜி.வி நடித்த படங்கள் பெரியளவில் பார்க்கவில்லை. ஆனால் களவன் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது அவரது நடிப்பு நிறைய மாறி இருப்பதை பார்க்கிறேன். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்திற்கு இசையமைத்த போது தனுஷ் நடிப்பதை மறைந்து நின்று பார்த்து கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன்.


இந்தப் படத்தில் அவரது நடிப்பு பார்ப்பதற்கு அப்படி பொல்லாதவன் படத்தில் தனுஷ் நடித்தது போல் இருக்கிறது. அந்த அளவிற்கு ரொம்ப அருமையாக நடிக்கிறார் . அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இவானாவைப் பார்த்தபோது யார் இந்த நடிகை ரொம்ப அழகா இருக்கிறாரே என்று தோன்றியது. அவர் வரும் சில காட்சிகளிலேயே கவனம் ஈர்க்கிறார். 


அடுத்து பாரதிராஜா பையோபிக் தான்


”இந்த விழாவிற்கு நான் வருவதற்கு முக்கியமான காரணம் பாரதிராஜா சார் தான். அவருக்காக எந்த இடம் என்ன நேரம் என்றாலும் நாங்கள் வருவோம் . அவருடைய படங்கள் பார்த்து தான் நாங்கள் வந்தோம். ஒவ்வொரு முறை அவருடைய படங்களைப் பார்க்கும் போது நான் அவரிடம் இந்த காட்சியை எப்படி எடுத்தார் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். பாரதிராஜாவை போற்றும் வகையில் ஒரு மாபெரும் விழாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நாங்கள் ரொம்ப நாட்களாக திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறோம்.  சமீபத்தில் இளையராஜா மாதிரி தமிழ் சினிமாவில் நீங்களும் ஆவணப்படுத்தப் பட வேண்டிய ஒரு மனிதர். கூடிய விரைவில் உங்களுடைய பையோபிக் ஒருவர் எடுப்பார். தமிழ் சினிமாவின் எல்லா நடிகைகளும் அதில் வருவார்கள். “ என்று லிங்குசாமி கூறினார்