இயக்குநர் பாண்டியராஜனின் நெத்தியடி படம் மூலம் தமிழ் திரையிலகில் அறிமுகமானவர் நடிகர் கிங்காங். இவரின் உண்மையான பெயர் சங்கர். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த அதிசய பிறவியில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து ஜமீன் கோட்டை போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.
இந்தநிலையில், நடிகர் கிங் காங் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தனது சினிமா அனுபவங்கள், நினைவுகள் குறித்து பகிர்ந்தார். அதில், “என் உயரம் பார்த்து முதலில் என்னை நாடக கம்பெனியினர் கோமாளி வேஷம் போட அழைத்தார்கள். அப்பொழுது, நான் மேடையில் ஏறும்போது என் உயரத்தை பார்த்தும், என் குரலை கேட்டும் கேலி செய்து சிரித்தார்கள். அப்படியே 3 ஆண்டுகள் கழிந்ததும் நாடக கம்பெனியினரும், என் நண்பர்களும் என்னை சினிமாவிற்கு செல்லுமாறு என்னை கட்டாயபடுத்தினார்கள். நீதான் நல்ல நடிக்குற சினிமாக்கு போடா, உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு என்று எல்லாரும் ஊக்கப்படுத்தினார்கள்.
அந்த நேரத்தில் எனக்கு யாரை தொடர்புகொள்வது, எப்படி சினிமாவிற்குள் செல்வது என்று தெரியவில்லை. நாடகம் இரவு 9 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணி வரை ஆகும் முடிவதற்கு. அப்பொழுதுதான் என் அக்காவிற்கு புதிதாக திருமணம் நடந்தது. என் அக்கா கணவரின் சொந்தகாரர்கள் சென்னையில் இருந்ததால், அவர்கள் வீட்டில் தங்கி சினிமா வாய்ப்பை தேடினேன்.
அப்பொழுதுதான் இயக்குநர் பாண்டியராஜனின் 'நெத்தியடி'படம் மூலம் எனது சினிமா பயணம் தொடங்கியது. அதன்பிறகு எனது குருவான கலைபுலி எஸ். சேகரன் நடித்த ஜமீன் கோட்டை படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினேன். அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மனிதனாகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் பேயாவும் நடித்தேன். அந்த நேரத்தில் இரட்டை கதாபத்திரத்தில் நடிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று.
அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த அதிசய பிறவி படம்தான் நான் யார் என்று இந்த வெளியுலகிற்கு தெரிய முக்கிய காரணமாக இருந்தது. அதில் நான் ஆடிய பிரேக் டான்ஸ் இன்னும் எனக்கு பெயர் பெற்று தருகிறது. நான் எங்கும் முறையாக நடனம் கற்கவில்லை. நான் பார்த்த கமல்ஹாசனின் 'சகலகலா வல்லவன்', ஆனந்த பாபு நடித்த படங்கள் மூலம் என் திறமை வெளிப்பட்டது.
தொடர்ந்து, பல படங்கள் நடித்தாலும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் படம் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் என்னிடம் காட்டில் இருந்து தப்பிக்க ஹிந்தியில் வழி கேட்பார்.எனக்கு புரியாததால் நான் அவருக்கும் புரியும்படி நான் வாயால் சில சத்தங்கள் கொடுத்து வழி சொல்வேன் இதுதான் காட்சி. முதலில் படபிடிப்புக்கு முன்பாக ஷாருக்கானை பார்த்தபோது என் கால்கள் கிடுகிடுவென நடுங்க தொடங்கியது. அதன்பிறகு காட்சி நடித்து முடித்தபிறகு என்னை ஷாருக்கான் வெகுவாக பாராட்டி என் நெத்தியில் முத்தம் கொடுத்தார். நானும் தொடர்ந்து அவரிடம் எனக்கு இருந்த ஆசையைக் கூறி அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தேன் என்று தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்