அஜித் நடிப்பில் உருவான ’வலிமை’ படம் கடந்த 24-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அஜித் குமார்,போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் குழு ஏகே 61 படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.
ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை அடுத்து, மார்ச் 9-ம் தேதி படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நாயகி பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் கவின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கும் கவின், அடுத்து அஜித் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் மகிழ்ச்சியில் இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், கவின் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்றும், அஜித் திரைப்பட வெளியீட்டின்போது திரையரங்கில் ரசிகர் சண்டையில் ஈடுபட்டதாகவும் நேர்காணல் ஒன்றில் தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் தனது சின்னத்திரை கரியரை தொடங்கிய கவின், ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் கவனம் ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலம் இன்னும் அதிகமாக கவனிக்கப்பட்டார். சினிமாவைப் பொறுத்தவரை, ’நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தை அடுத்து, ’லிஃப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனை அடுத்து, 'ஆகாஷ் வாணி' என்ற வெப் சீரீஸில் நடித்திருந்தார். இந்நிலையில், அஜித் 61 படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகே 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாதத்தில் தொடங்கும் இந்த ஷூட்டிங் பாண்டிச்சேரி, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற நகரங்களில் படமாக்கப்பட்டு 7 மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து இந்த ஆண்டே படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏகே 61 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என தெரிகிறது. இதனால், இந்த வருடத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் உறுதி என்பதை படக்குழு சொல்லாமல் விருந்து வைக்க காத்திருக்கிறது. ஏற்கனவே வலிமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில், அடுத்து ஏ.கே 61 மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்