பிளடி பெக்கர்
தொலைக்காட்சித் தொடர்களின் வழியாக சினிமாவில் நடிகராக கால் பதித்தவர் நடிகர் கவின் . கடந்த ஆண்டு வெளியான டாடா இந்த ஆண்டு ஸ்டார் என அடுத்தடுத்த இரு வெற்றிப்படங்களுக்குப் பிறகு வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார். கவினின் படங்கள் விமர்சன ரீதியாக கவனமீர்ப்பது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வெற்றிபெறுவது அவரை மற்ற நடிகர்களிடம் இருந்து தனித்து காட்டும் அம்சம்.
ஸ்டார் படத்தைத் தொடர்ந்து தற்போது கவின் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நெல்சனின் ஸ்டைலில் முழுக்க முழுக்க டார்க் காமெடி ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் பற்றிய தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் பிளடி பெக்கர் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் , அஜித் குமார் நடித்த விடாமுயற்சி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. தற்போது தீபாவளில் ரேஸில் கவினின் பிளடி பெக்கர் படமும் இணைந்துள்ளது