அஜித் படம் பார்க்க சென்று அடி வாங்கிய சம்பவத்தை நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமானார் கவின். இவர் லிஃப்ட், டாடா ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது “ஸ்டார்” என்ற படத்தில் நடித்துள்ளார். இளன் இயக்கியுள்ள இந்த படத்தில் அதிதி போங்ஹர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகிறது. 


இப்படத்தின் ட்ரெய்லர் தமிழ் திரையுலகினர் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் கவினுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என கணித்துள்ளனர். ஸ்டார் படம் தொடர்பாக பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கவின், இயக்குநர் இளன் என பலரும் பங்கேற்று வருகின்றனர். இதில் ஒரு நேர்காணலில் கவினிடம், “முதல் நாள் முதல் காட்சி பார்த்து பயங்கரமாக விசில் அடிச்சி ரகளை செய்த படம் எது” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எல்லா தல (அஜித்) படமும் தான். தல பேன்ஸ் என்பதை தாண்டி தல வெறியர்கள் என ஒரு குரூப் இருக்கும் தெரியுமா?. அந்த குரூப்பில் தான் நான் வருவேன்.


திருமலை, ஆஞ்சநேயா படம் வெளியான நேரத்தில் திருச்சியில் ஒரு பஞ்சாயத்து நடந்தது. அங்கு ஒரே காம்ப்ளக்ஸில் சோனா, மீனா என இரு தியேட்டர்கள் இருக்கும். ஒரே நாளில் தல, தளபதி படம் வெளியாகிறது என்பது பயங்கரமான விஷயம். பக்கத்து பக்கத்து தியேட்டர்களில் ரிலீஸானால் என்ன ஆகும்?. அந்த தியேட்டரில் இரண்டு கட் அவுட்டுகள் வைத்தோம். நான் உள்ளே விட்டால் தியேட்டருக்குள் படம் பார்க்க சென்று விடலாம் என ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சண்டையெல்லாம் முடிந்தால் தான் தியேட்டர் திறப்போம் என சொல்லி விட்டார்கள். அதனால் நான் காத்துக்கிட்டு இருக்கும் நேரத்தில் போலீஸ் அங்கே வந்தார்கள். என்ன நடந்தது என தெரியவில்லை. இங்கே சண்டை போட்டுக் கொண்டிருந்த தல, தளபதி ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து போலீஸை அடித்து விட்டார்கள். பஞ்சாயத்து வெடித்து விட்டது. இந்த கலவரத்தில் எனக்கும் அடி விழுந்தது. தனிப்பட்ட முறையில் அடி விழவில்லை. கும்பலோடு கும்பலாக போகும்போது அடி விழுந்தது. அதெல்லாம் செம கதை” என கவின் தெரிவித்துள்ளார்.