சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு முயற்சி செய்யும் போது “சீரியல் மூஞ்சி” என கூறி வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகர் கவின் தெரிவித்த பழைய நேர்காணல் வீடியோ வைரலாகியுள்ளது. 


இளன் இயக்கத்தில் கவின், அதிதி போங்ஹர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள படம் “ஸ்டார்”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளன் இயக்கிய பியார் பிரேம காதல் படத்தில் ஹீரோவாக நடித்த ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியான நிலையில், பிற படங்களில் பிஸியானதால் கவின் நாயகனமாக களம் கண்டார்.


ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வேண்டும் என சிறிய வயதில் இருந்தே கனவு காணும் இளைஞனின் ஆசை, கோபம், விரக்தி, முயற்சி என பல பரிணாமங்களை விளக்குவதாக இப்படம் அமைந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து வந்த கவினுக்கு லிஃப்ட், டாடா ஆகிய 2 படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கவின் மீது ஏற்படுத்தியுள்ளது. 






இதனிடையே அவரின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் பேசியுள்ள கவின், “நான் அடிப்படையில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு முயற்சி செய்கிறோம் என்றால் கண்டிப்பாக உதாசீனப்படுத்துவது என்ற ஒன்று இருக்கும். அப்படியாக சில படங்கள் முயற்சி செய்யும்போது சீரியல் மூஞ்சி என சொல்லி கிண்டல் செய்வார்கள். இந்த மாதிரி விஷயம் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு முயற்சி செய்யும் அனைவருக்குமே நடந்திருக்கும்.


எனக்கு நிஜமாகவே சின்னத்திரைக்கு ஒரு நடிப்பு, சினிமாவுக்கு ஒரு நடிப்பு என எப்படி பிரித்து பார்க்கிறார்கள் என தெரியவில்லை. அப்படி ஒன்று இருக்கிறதா என தெரியவில்லை. உடனே என்ன தேவை என கேட்கிறார்களோ அதை நான் நடிக்கிறேன். சீரியலுக்கு ஒரு மூஞ்சி, சினிமாவுக்கு ஒரு மூஞ்சின்னு எல்லாம் என்னால வாங்கிட்டு வர முடியாது. இருக்கிறது ஒரு மூஞ்சி தான். அதை வைத்து என்ன பண்ண முடியுமோ, அதுதான் பண்ண முடியும்” என  தெரிவித்திருப்பார். இதனைப் பார்க்கும்போது ஸ்டார் படம் கவினின் ஒரிஜினல் கதையாக இருக்கலாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.