தமிழ் சினிமாவின் இளம் நடிகரான கவின் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான  சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார் கவின். தொடர்ந்து அதே சீரியலின் அடுத்த சீசனில் ஹீரோவாக பிரபலமானார். இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘சத்ரியன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் கவின் அடியெடுத்து வைத்தார். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் அவரை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்ந்தது. 


அந்நிகழ்ச்சியின் பணப்பெட்டியோடு வெளியேறிய கவினுக்கு அடுத்தடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு கடந்த ஆண்டு  வெளியான ‘டாடா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது. கவினை மக்கள் கொண்டாட தொடங்கினார். அந்த படத்தில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தின் வெற்றியால் கவின் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 


இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அவர் நடித்து வரும் ஸ்டார் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இளன் இயக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் இ.ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன்பின்னர் பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் கவின் நடிக்கவுள்ளா. இப்படத்தில் ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளார். மேலும் மிஷ்கின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதன்பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கவின் ஒரு படம் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை அவரின் உதவியாளர் சிவபாலன் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 






இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கவினின் அடுத்த புதுப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். கிராஸ் ரூட் கம்பெனி இப்படத்தை தயாரிக்க வெற்றி மாறனின் உதவி இயக்குநரான விகர்னன் அசோகன் இயக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழ் சினிமாவில் அடுத்தக்கட்ட ஹீரோவாக வளர்ந்து வரும் கவின், அடுத்தடுத்து நெல்சன், வெற்றிமாறன் தயாரிப்பில் படம் நடிக்கவுள்ளது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.