நடிகர் கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.
சமீபத்தில் டாடா எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் நடிகர் கவின்.
காதல் டூ கல்யாணம்
சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வெற்றிகரமாக பயணித்து வரும் கவினின் திரைப்பயணம் அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் அடுத்தடுத்த படங்களை கவின் கவனமாக தேர்ந்தெடுத்து வரும் நிலையில் அடுத்ததாக, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் காதல் கதையில் கவின் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கின.
கவின் தரப்பினரும் இந்த செய்தியை உறுதி செய்த நிலையில், மோனிகா தனியார் பள்ளி ஆசிரியை என்றும், இது காதல் திருமணம் என்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட்.20 இன்று திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இன்று காதலி மோனிகாவை கவின் கரம்பிடித்துள்ளார். சென்னையில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன. ஏராளமான திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என கவின் - மோனிகா தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை
விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சியின் முதல் சீசனில் முருகன் என்னும் கேரக்டரிலும், 2வது சீசனில் வேட்டையன் என்னும் கேரக்டரிலும் நடித்து சின்னத்திரை வழியாக முதலில் முத்திரை பதித்த கவின், தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கவின் கலந்து கொண்ட நிலையில், அதில் கலவையான விமர்சனங்களை அவர் பெற்றாலும் அடுத்தடுத்து வெள்ளித்திரையில் கால் பதித்து முன்னேறினார்.
ஏற்கெனவே 2012 ஆம் ஆண்டு பீட்சா, 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை, 2017 ஆம் ஆண்டு சத்ரியன் ஆகிய படங்கள் சிறு வேடங்களில் நடித்திருந்த கவின், பிக் பாஸ் புகழுக்குப் பிறகு, லிஃப்ட்’ படத்தின் மூலம் ஹீரோவானார்.
அதனைத் தொடர்ந்து வெளியான டாடா படம் கோலிவுட் வட்டாரத்தில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக அமைந்து ரசிகர்களின் இதயங்களை வென்று வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், கவின் தற்போது தேர்ந்தெடுத்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.