பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் கிடையாது என நடிகர் கருணாஸ் பட விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். 


அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள படம் “போகுமிடம் வெகு தூரமில்லை”. இப்படத்தில் மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி என பலரும் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 


இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கருணாஸ், “பணம் தான் எல்லாரிடத்திலும் இருக்கிறது. அதை வைத்திருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் கிடையாது. என்னை பொறுத்தவரை நான் நிறைய படங்கள் நடித்துள்ள நிலையில் சில படங்கள் எனக்கு பிடிக்கும். சில கேரக்டர்கள் பிடிக்கும். நான் 24 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறேன். சினிமாவில் நம்முடன் இருக்கும்போது இன்னொருவரிடம் கால்ஷீட் கேட்பதெல்லாம் ரொம்ப கொடூரமான ஒரு விஷயமாக இருக்கும். 


என்னை பொறுத்தவரை வாய்ப்புகள் வரணும், இல்லாவிட்டால் உருவாக்கணும். இந்த படத்துக்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். வித்தியாசமான விமலை பார்க்கலாம். நான் முதல்முறையாக ஒரு ஹீரோவுடன் நடித்தால் அந்த படம் கவனிக்கத்தக்க படமாக இருக்கும். அந்த வகையில் விமலுக்கு இப்படம் நல்லபடியாக இருக்கும். பொதுவாக யார் அலுவலகத்திலும் சென்று நடிக்க வாய்ப்பு கேட்டதில்லை.  ஆனால் ஒரு கதை கேட்டு விட்டு அதை என் குடும்பத்தாரிடம் சொன்னேன். அதில் இருக்கும் சூப்பர் கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். 


முதலில் அந்த கேரக்டர் எனக்கு கிடைக்கவில்லை. விதி இருந்தால் நமக்கான கேரக்டர் வந்து சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படித்தான் எதிர்பார்த்த கேரக்டர் வந்தது. மேலும் என்னுடைய மனைவி அடிக்கடி வீடு கட்டாதது பற்றி கவலைப்படுவார். அதற்கு, கவர்னர் இருக்கும் ஆளுநர் மாளிகை பட்டா கருணாஸ் பெயரில் வர வேண்டும் என்றால் வந்து சேரும் என சொல்லுவேன். 


1992 ஆம் ஆண்டு அப்போதைய ஜெயலலிதாவிடம் மாநில கல்லூரியில் படிக்கும்போது தமிழ்நாட்டின் சிறந்த மிமிக்ரி கலைஞராக தேர்வு செய்யப்பட்டு 5 சவரன் நகை வாங்கினேன். அதை துண்டு துண்டாக வெட்டி விற்றது தனிக்கதை. ஆனால் வாங்கியிருக்கதை குறிப்பிட வேண்டும். அதேபோல் சென்னா ரெட்டி, பீஷ்மன் நாராயண் சிங் உள்ளிட்ட ஆளுநர்களிடமும் விருது வாங்கியிருக்கேன். இந்த இடத்துக்கெல்லாம் சும்மா வரவில்லை. ஒரு வயதுக்கு மேலே உழைத்து கொண்டே இருக்க முடியாது. எந்த வேலையிலும் உண்மையாக இருந்தால் நமக்கான ஊதியம் நிச்சயம் வந்து சேரும்” என தெரிவித்தார்.