தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக உலா வந்தவர் நடிகர் கார்த்திக். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக வசூல் மன்னனாக உலா வந்தவர். ஆனால், படப்பிடிப்பிற்கு முறையாக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது பல காலமாக இருந்து வந்த நிலையில், பாரதி கண்ணன், பாலாஜி பிரபு என பலரும் இவரால் பாதிக்கப்பட்டதை தற்போது பேட்டி அளித்து வருகின்றனர்.
விக்ரமனிடமும் பிரச்சினை செய்த கார்த்திக்:
இந்த சூழலில், பிரபல இயக்குனர் விக்ரமன் கார்த்தியால் பாதிக்கப்பட்டது குறித்து முன்பு அளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விக்ரமன் பேசியிருப்பதாவது,
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் கூட கார்த்திக் சார் நடிக்கும்போது முதல் 3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் வாஹினி ஸ்டூடியோஸ்ல செட் போட்ருக்கோம். தயாரிப்பாளர்களை கூப்பிட்டு எனக்கு இந்த கதை அந்தளவு பிடிக்கல. இது நான் நடிச்ச நந்தவனத் தேர் மாதிரியே இருக்குது அப்படினு ஏதோ ஒரு குழப்பம் பண்றாரு. தயாரிப்பாளர்கள் என்கிட்ட சொல்றாங்க.
என்ன பிரச்சினை:
நான் வாஹினியில் ஷுட் பண்ணிகிட்டு இருக்கேன். அவர் நடிச்சுட்டு போயி உக்காந்து இருக்காரு. ஷுட் முடிச்சுட்டு வந்து பாக்குறேனு நேரா கார்த்திக் சார் ரூமுக்கு போனேன். அவர் ரூமுக்கு போனேன் என்ன சார் பிரச்சினை?னு கேட்டேன். எனக்கு என்னமோ இந்த கதை நந்தவனத் தேர் மாதிரியே இருக்குது. அதுலயும் ஹீரோயினை பாடகியா ஆக்குவேன்னு சொன்னாரு. நான் அது வேற, இது வேற சார். பாடகியா ஆக்குறது எல்லாம் கதை இல்ல. பாடகியாக்கி முன்னுக்கு வந்த ஒருத்தர் நான் இவராலதான் முன்னுக்கு வந்தேனு நன்றியை சொல்ற ஒரு கதை இது. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது.
நம்பிக்கை இருந்தா நீங்க நடிங்க. இல்லனா உங்களை வச்சு தயாரிப்பாளர் வேற படத்தை எடுத்துக்கட்டும். நான் இதே படத்தை வேற ஹீரோ வச்சு வெற்றிப்படமாக்கி காட்றேன். சவால் அப்படினு சொன்னேன். உடனே அவர் யோசிச்சாரு. யோசிச்சுட்டு அவர் இவ்ளோ நம்பிக்கையா நீங்க இருந்தா நான் நடிக்குறேன் அப்படினு சொன்னாரு.
இவ்வாறு விக்ரமன் கூறியிருப்பார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி:
1998ம் ஆண்டு இந்த படம் வெளியாகியது. இந்த படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க அவருடன் ரோஜா, ரமேஷ் கண்ணா, மெளலி, சத்யப்பரியா, மதன்பாப், வையாபுரி, சிங்கமுத்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். அஜித் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் 250 நாட்கள் கடந்து மாபெரும் வெற்றி பெற்ற படமாக ஓடியது. நல்ல திறமையான நடிகராக கார்த்திக் இருந்தாலும் முறையான நேரத்திற்கு படப்பிடிப்பிற்குச் செல்லாதது உள்ளிட்ட காரணத்தாலே கார்த்திக் தனது மார்க்கெட்டை திரையுலகில் இழந்தார்.