இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது தந்தையும், நடிகருமான சிவக்குமார் மற்றும் குடும்பத்துடன் பழனி மலைக்கோயிலில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்தி பிறந்தநாள்
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்த்திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் சிவக்குமார் இன்று மலைக்கோயிலுக்கு அருள்மிகு தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்வதற்காக குடும்பத்தாருடன் வின்ச் மூலம் வருகை புரிந்தார். அவரது மகனும் நடிகருமான கார்த்திக் படிப்பாதை வழியாக மலைக்கோயில் வந்தடைந்தார். காலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சாமியை விஸ்வரூப அலங்காரத்தில் தரினம் செய்த அவர்கள் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள அருள்மிகு போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயிலில் பணிபுரிவர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகர் சிவக்குமார் வின்ச் பாதையிலும், நடிகர் கார்த்திக் படிவழியிலும் கீழிறங்கினர். கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி மலை முருகனை சாமி தரிசனம் செய்துள்ளனர்.
3 படங்கள் ரிலீஸ்க்கு ரெடி
கார்த்தியின் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’, இரட்டை வேடங்களிலும் நடித்துள்ள ‘சர்தார்’ ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன. கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விருமன்’ படக்குழு படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. மேலும், ‘சர்தார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்