நடிகர் கார்த்தி நடித்திருக்கும் “வா வாத்தியார்” படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
எதிர்பார்ப்பில் “வா வாத்தியார்”
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படத்துக்குப் பின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் படம் “வா வாத்தியார்”. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாகவும், கிரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஆனந்தராஜ், வடிவுக்கரசி, பி.எல்.தேனப்பன், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜிஎம் சுந்தர் என ஏகப்பட்ட பேர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 14) போகி பண்டிகை அன்று தியேட்டரில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் “வா வாத்தியார்” படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் எம்ஜிஆர் மறைந்த நாளான டிசம்பர் 24ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு, ராஜ்கிரண் பேரனான கார்த்தி பிறப்பது போன்றும், தீவிர எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் “வாத்தியார் பிறந்திருக்கிறார்” என சொல்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் எம்ஜிஆர் உள்ளங்காலில் இருக்கும் மச்சம், என் பேரன் காலிலும் இருப்பதாக அவர் நெகிழ்கிறார். மேலும் எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது அவரை நேரில் காண முடியவில்லை. அதனால் எம்ஜிஆர் ரசிகர்களான தங்களுக்கு குடியிருந்த கோயில் படத்தை போட்டு காட்டுமாறு ராஜ்கிரண் கூறுகிறார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நிறுத்தப்படுகிறது. என்னவென்று ஆபரேட்டரிடம் போய் கேட்கும்போது முதலமைச்சரான எம்ஜிஆர் காலமானதாக சொல்லப்படுகிறது.
இதனால் படம் பார்க்க வந்த எம்ஜிஆர் ரசிகர்கள் கதறி அழுகின்றனர். அந்த தியேட்டர் வாசலில் துக்கம் கடைபிடிக்கும் காட்சிகளும் உள்ளது. மேலும் வா வாத்தியார் என்ற டைட்டிலும் விதவிதமான எழுத்துகளில் காட்டப்படுகிறது. இதனால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என கார்த்தி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் எப்படி பராசக்தி படம் திமுகவுக்கு எடுக்கப்பட்டதோ, அதேபோல் அதிமுகவினரை கவர வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சிலாகித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் எப்படியாவது பிரச்னை இல்லாமல் படத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.