புதுச்சேரி: காரைக்காலில் தொடர் மழை பெய்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு.
காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று (13-01-2026) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே காரைக்கால் பகுதிகளில் விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (13.01.2026) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமசிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வானிலை நிலவரம்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு (ஜனவரி 18 வரை) பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் மழை வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை 13 முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம்: ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகம்: ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி & காரைக்கால்: இங்கும் மிதமான மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை & புறநகர்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேர மழை அளவு
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் தலா 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதர பகுதிகள்:
காக்காச்சி, குன்னூர் - தலா 50 மி.மீ.
கோடநாடு, மாஞ்சோலை, கோத்தகிரி - தலா 40 மி.மீ.
கொடைக்கானல், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக 20 மி.மீ முதல் 30 மி.மீ வரை மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக:
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை 13, 14) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
