கல்லூரியில் படிக்கும் போது எப்படா லவ் பண்ணுவோம்னு ஏங்குனேன் என நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் 2:
எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் மணிரத்னம் இரு பாகங்களாக திரைப்படம் எடுத்துள்ளார். இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் நல்ல சாதனைப் படைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விளையாட்டு திடலில் பொன்னியின் செல்வன் பாகங்களுக்கான பிஎஸ் ஆந்தம் (Anthem) பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நினைவுகளை பகிர்ந்த கார்த்தி
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “என்ஜினீயரிங் படிக்கணும்னு தலையெழுத்து ஒன்னு இருந்தா, ஒன்னு ஐஐடி போகணும்... இல்ல அண்ணா யூனிவர்சிட்டி வரணும்ன்னு தொகுப்பாளர் விஜய் சொன்னாரு. என்னை விட என் அம்மா, அப்பா நான் என்ஜினீயரிங் படிக்கணும். அதுவும் அண்ணா பல்கலைக்கழகத்துல படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆனால் கடைசி வரை சீட் கிடைக்கவே இல்லை. விழா நடக்குற இந்த மைதானத்துல ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங் முன்னாடி பல மணி நேரம் ரன்னிங் போனது தான் மிச்சம்.
லவ் பண்ணுவோம்னு ஏங்குனேன்:
வந்தியத்தேவன் கேரக்டர் பத்தி சொல்லணும்னா, சூர்யா அண்ணா ஒரு மேடையில எது நமக்கு வேணும்ன்னு ரொம்ப தவிக்கிறோமோ அது கிடைச்சிரும் என சொன்னாரு. அந்த மாதிரி நான் படிச்சது பாய்ஸ் ஸ்கூல், காலேஜ்ல மெக்கானிக்கல் என்ஜினீயரிங். பெண் பேராசியர்கள் கூட இருக்க மாட்டங்க. நாமெல்லாம் எப்படா லவ் பண்ணுவோம்னு ஏங்குனதுக்கு வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் கிடைத்துள்ளது. படத்துல உலக அழகி(ஐஸ்வர்யா ராய்), மிஸ் சென்னை (த்ரிஷா), மீன் பிடிக்கும் பெண் (ஐஸ்வர்யா லட்சுமி) எல்லோருக்கும் லைன் போட்டுருக்கோம்” என கார்த்தி நகைச்சுவையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எல்லோரும் பண்ணனும்ன்னு நினைச்ச கேரக்டர் எனக்கு கிடைச்சிருக்கு. ரியல் லைஃப்ல நான் ஜாலியான வந்தியத்தேவன் கேரக்டர். நான் மகான் அல்ல படத்தில் வருவது மாதிரி எப்படியாவது ஒரு பொண்ணு போன் நம்பர் கிடைக்காதா, பேசிட மாட்டோமா என நினைப்பேன். சொல்லப்போனால் ரெமோ போல் நான் ஒரு ஸ்பிலிட் ஆன கேரக்டர்” என்றார்.
மேலும், “படப்பிடிப்பில் அனைத்தையும் ஜெயம் ரவியிடம் பகிர்ந்து கொள்வேன். மணிரத்னம் கூட என்னடா அப்படி பேசுறீங்க என கேட்பார். விக்ரம் சாரின் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றார். இதனையடுத்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்னென்ன காலர் டியூன் வைப்பீர்கள் என கார்த்தியிடம் கேட்டார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாட்டு:
அதற்கு ஜெயம் ரவிக்கு (ரோமியோ ஜூலியட் டண்டணக்கா பாடல்), விக்ரமுக்கு (ஓ போடு), திரிஷாவிற்கு (காதலே காதலே), ஐஸ்வர்யா லட்சுமிக்கு (நிலா அது வானத்து மேலே), ஐஸ்வர்யா ராய்க்கு (அன்பே அன்பே கொள்ளாதே), ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பம்பாய் படத்தின் லவ் தீம் பாடலை காலர் டியூனாக வைப்பேன். அதேசமயம் ஜெயராமை பற்றி பேசும் போது, அவர் ஒரு உலகமகா இம்சை. தமிழ் வாத்தியார் போல் ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் வசனத்தை கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு 20 முறை சொன்னால் தான் விடுவார்” என கார்த்தி பேசினார்.