தனது 25ஆவது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி ரூ.1 கோடிக்கு நல உதவி அறிவித்துள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ஜப்பான். கார்த்தியின் 25ஆவது படமாக ஜப்பான் உருவாகியுள்ள நிலையில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அனு இம்மானுவேல், ஜித்தன் ரமேஷ் சுனில்,  பவா செல்லதுரை, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  


இந்நிகழ்ச்சிக்கு ஜப்பான் படத்தின் இயக்குநர் ராஜூ முருகன், தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, நடிகர்கள் சூர்யா,  விஷால், ஆர்யா, நடிகை தமன்னா, நடிகர்கள் பொண்வண்ணன், சத்யராஜ் , சிபி சத்யராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், பி.எஸ்.மித்ரன், ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் வருகை தந்ததுடன், கார்த்தியின் திரைப் பயணம் பற்றி பேசினர்.


கார்த்தியின் 25ஆவது பட  விழா என்பதால் அவருடன் பணியாற்றிய திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் வருகை தந்த நிலையில், ஒட்டுமொத்த கோலிவுட்டே திரண்ட நிகழ்வு போல் காட்சியளித்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கார்த்தி செய்துள்ள செயல் பல தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


தனது 25ஆவது படத்தை முன்னிட்டு ரூபாய் ஒரு லட்சம் வீதம் 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு 25 லட்ச ரூபாயும், நிதியுதவி தேவைப்படும் 25 பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார்.


மேலும், 25 மருத்துவமனைகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 25 லட்ச ரூபாயும், 25 நாள்களுக்கு 25 ஆயிரம் நபர்கள் பசியாறும் வகையில் 25 லட்ச ரூபாயும் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுத்தொகையை கார்த்தி வழங்கியுள்ளார்.


இந்த உதவித் தொகையை அறிவித்த கார்த்தி “இது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல, தன்னை வளர்த்த சமூகத்துக்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கார்த்தியின் இந்த செயல் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.