தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த நபராக வலம் வந்த அருண் வீரப்பன் வயது மூப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1960 ஆம் ஆண்டு மறைந்த பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் வெளியானது. ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரோடு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இன்றைய உலக நாயகன் கமல்ஹாசன். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடல் மிகவும் பிரபலமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் அருண் வீரப்பன்.
'மைன் சுப் ரஹுங்கி', 'மெஹர்பன்' மற்றும் 'பைசா யா பியார்' போன்ற பல வெற்றிப் படங்களில் தயாரிப்பு துறையில் பணியாற்றிய அவர், விவசாயம், குழந்தைகள் நலம் மற்றும் பிற சமூகத் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். கியூப் சினிமா நிறுவனத்தின் தலைவராக இருந்த அருண் வீரப்பன், 1980 ஆம் ஆண்டுகளிலேயே சினிமாவில் பல மின்னனு சாதனைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர். இதனால் திரைத்திரையில் இன்றைக்கு இருக்கும் முன்னணி நடிகர்களுக்கும் நன்கு பரீட்சையமானவர்.
அருண் வீரப்பன் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர் ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளை ஆவார். சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வந்த 90 வயதான அருண் வீரப்பன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தவறி விழுந்து காயமடைந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பிய அவர் நேற்று (ஆகஸ்ட் 27) மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அருண் வீரப்பன் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ‘குழந்தைங்க எப்படி பெருசா வளர்ந்துச்சு?’ : நயன் - விக்கியிடம் வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. ஏன் வன்மம்?