உலகப் புகழ்பெற்ற விலங்கியல் அறிஞரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளியுமான ஜேன் கூடால் (Jane Goodall) கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்
யார் இந்த ஜேன் கூடால் ?
1934 ஏப்ரல் 3ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள் மீது அக்கறை கொண்டிருந்தார். குரங்குகள், குறிப்பாக சிம்பாஞ்சிகள் குறித்த ஆர்வம் அவரை ஆப்பிரிக்கா நோக்கி அழைத்துச் சென்றது.
1960ஆம் ஆண்டு டான்சானியாவில் உள்ள கோம்பே தேசிய பூங்காவில் அவர் ஆராய்ச்சி தொடங்கினார். அங்கே சிம்பாஞ்சிகளின் வாழ்வை நேரடியாகக் கவனித்தார். மனிதர்களைப் போல் அவர்கள் கருவிகளை பயன்படுத்துவதை முதன்முதலாக கண்டுபிடித்தவர் கூடால்தான். அதுவரை மனிதரே கருவிகளைப் பயன்படுத்துவார் என்ற கருத்து நிலவி வந்தது. இவரது ஆய்வுகள் உலக விஞ்ஞானக் களத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தின.
விலங்குகளை வெறும் ஆய்வுப் பொருளாகக் காணாமல், உயிருடன் கூடிய சமூகமாகக் கருதியவர் கூடால். குரங்குகளின் நட்பு, பாசம், சண்டை, குடும்ப உறவு போன்ற அம்சங்களை மனித சமுதாயத்துடன் ஒப்பிட்டு விளக்கினார். இதன் மூலம் மனிதர் மற்றும் வனவிலங்குகள் இடையிலான நெருக்கத்தை உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
ஆராய்ச்சியுடன் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அவர் முக்கிய பங்காற்றினார். வனவிலங்குகளின் வாழ்விடம் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார். 1977ஆம் ஆண்டு ஜேன் கூடால் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பைத் தொடங்கி வனவிலங்கு பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசப்படும் போது, ஜேன் கூடாலின் பெயர் தவறாமல் குறிப்பிடப்படுகிறது. வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான சமநிலையை நிலைநாட்டிய முன்னோடி அவர். அறிவியல், பாசம், அக்கறை ஆகியவற்றை ஒன்றிணைத்து செயல்பட்ட அவரின் வாழ்க்கை நமக்கு ஒரு சிறந்த பாடமாக விளங்குகிறது.
மொத்தத்தில், ஜேன் கூடால் மனிதரும் இயற்கையும் இடையிலான உறவை மீண்டும் உணர்த்திய அரிய விஞ்ஞானியும், மனிதாபிமானியும் ஆவார்.
கமல்ஹாசன் இரங்கல்
ஜேன் கூடால் மறைவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். " ஜேன் கூடால் நமக்கு ஒரு அடிப்படை உண்மையை நினைவூட்டினார்: மனிதர்கள் இந்த கிரகத்தின் எஜமானர்கள் அல்ல, ஆனால் சக குடியிருப்பாளர்கள். சிம்பன்சிகளை கண்களின் வழியாக அவற்றை வெறு கருவிகளாக இல்லாமல் அவற்றை நமது குடும்பங்களாக பார்க்க செய்தார். அவரது மறைவில், ஒரு முக்கியமான கேள்வி நீடிக்கிறது - மற்ற உயிர்களோடு ஒத்திசைந்து மனிதர்களாகிய நாம் எப்போது வாழ கற்றுக் கொள்வோம்?" என கமல் தனது பதிவில் கூறியுள்ளார்