தமிழ் திரைப்பட உலகின் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர், பாடலாசிரியர் ஸ்நேகன். சமீபத்தில் இவருக்கு இரண்டை பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், அந்த குழந்தைகளுக்கு கவித்துவமாக பெயர் சூட்டியுள்ளார்.


பன்முகத்திறமையால் புகழ்பெற்ற ஸ்நேகன்


தமிழ் திரையுலகில், ஞாபகம் வருதே உள்பட 2,500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள ஸ்நேகன், பாடலாசிரியராக மட்டுமல்லாமல், பேச்சாளர், நடிகர், அரசியல்வாதி என்று பல்துறைகளில் முத்திரை பதித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 1-ல் பங்கேற்ற இவருக்கு புகழும் கூடியது. அதை வைத்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் ஸ்நேகன்.


இந்நிலையில், கடந்த 2021-ல் சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்நேகன். இந்த தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அதை சமூக வலைதளம் வாயிலாக அவர்கள் அறிவித்தனர்.


ஸ்நேகன் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் வைத்த பெயர்..


தமிழ் திரையுலகில், காதல் இளவரசனாக அறியப்படுபவர் கமல்ஹாசன். வயதானாலும் கூட, அவரது காதல் லீலைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு, திரைப்படங்களிலும் சரி, நிஜத்திலும் சரி, இன்னமும் காதல் இளவரசனாகவே வலம் வருகிறார். அவரிடம் அந்த காதல் மட்டும் இன்னும் குறையவில்லை. இப்படி காதலுக்கு பெயர் போன கமல்ஹாசன், அதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக, கவிஞர் ஸ்நேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளார். அதையும், காதலர் தினத்தன்றே செய்துள்ளார்.


ஆம், ஒரு குழந்தைக்கு ’காதல்’ என்றும் மற்றொரு குழந்தைக்கு ‘கவிதை‘ என்றும் பெயர் சூட்டியுள்ளார் கமல்ஹாசன். அதோடு நிறுத்தாமல், அவர்களுக்கு தங்க வளையல்களையும் பரிசாக அளித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஸ்நேகன்.