எத்தனையோ திரைப்படங்களில் மகள்களின் மேல் பாசத்தைப் பொழியும் தந்தைகளை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வை சண்முகி, மகாநதி , நாயகன், இந்தியன், தூங்காவனம், பாபநாசம் ஆகிய  படங்களில் தந்தைக் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் சினிமாவிலும் சரி  நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரு சிறந்த தந்தையாக விளங்கி வருபவர். இந்நிலையில், இரண்டு மகள்களுக்கு தந்தையாக இருக்கும் தனது அனுபவத்தை தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டுள்ளார்.


நான் எப்படியான தந்தையாக இருக்க ஆசைப்படுகிறேன்!


இந்த நேர்க்காணலில் ஒரு தந்தையாக தான் எப்படி நினைவுகூறப் படவேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார் கமல். “பெற்றோர் தங்களது குழந்தைகளை நேசிப்பதும், அதே மாதிரி குழந்தைகள் தங்களது பெற்றோரை நேசிப்பதும் இயல்பானதுதான். அதே மாதிரி தங்களது பெற்றோரை வெறுக்கும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஆனால் நேசமும் வெறுப்பும் கலந்திருக்கும் இந்த உறவைக் கடந்து உங்கள் குழந்தைகளால் நீங்கள் ஏதோ ஒரு நல்ல வகையில் நினைவுகொள்ளப்படுகிறீர்கள் என்றால் அதுவே உங்களை தனித்துவமான ஒரு தந்தையாக மாற்றுகிறது. எனது அப்பாவை நான் நினைவுகூறுவது போல் என் மகள்கள் என்னை நினைவுகூற வேண்டும் என நான் விரும்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.


மகள் ஷ்ருதி ஹாசனின் வாழ்த்து  


 முன்னதாக நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஷ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து தந்தையர் தினத்தன்று வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தார். மேலும் தன் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடனமாடும் வீடியோ  ஒன்றையும் ஸ்டோரியில் பகிர்ந்து ஷ்ருதி ஹாசன் லைக்ஸ் அள்ளினார்.


கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படங்கள்


 நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூரயா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைபடத்தின் டீசர் கமல்ஹாசனின் குரலில் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.