மெட்ராஸ் படத்தில் அன்பு கதாப்பாத்திரம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் கலையரசன். இவர் சோலோவாக நடித்து கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் அதே கண்கள் திரைப்படம் நல்ல வரவேற்பை தந்தன. அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு கிட்டவில்லை. சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, மெட்ராஸ்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் மீண்டும் டிரெண்டிங் என்ற படத்தின் மூலம் கலையரசன் சோலோவாக களம் இறங்கியுள்ளார்.
இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன்
மெட்ராஸ்காரன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கலையரசன், மெட்ராஸ் படத்திற்கு பிறகு எனக்கு வரும் படங்கள் எல்லாமே நான் சாகடிக்கப்படுவது போன்றே கதை சொல்கின்றனர். சிம்பு நடித்த பத்து தல படத்தில் கலையரசன் தானாக தற்கொலை செய்துகொள்வது போன்று இடம்பெற்றிருக்கும். இதனால், இனிமேல் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என வெளிப்படையாக பேசியது சர்ச்சையாக மாறியது. மேலும், கடந்தாண்டு வெளியான வாழை படத்தில் கலையரசன் நடிப்பு பாராட்டை பெற்றது. இவரது நடிப்பை பார்த்து இயக்குநர் மிஷ்கின் நான் பார்த்து அறிமுகம் செய்த பையன் கலையரசன், டேய் ராஸ்கல் அருமையாக நடித்திருக்க என பாராட்டினார். எனக்கு பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
புதுமுக இயக்குநரின் டிரெண்டிங்
இந்நிலையில், புதுமுக இயக்குநர் சிவராஜ் இயக்கும் டிரெண்டிங் படத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் பிரியா லயா நடித்துள்ளார். இவர், குட் நைட், இங்கே நான்தான் கிங் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்திருக்கிறார். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இப்படம் வரும் ஜூலை 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ரீல்ஸ் வீடியோவால் வரும் பிரச்னை
இன்றைய இளம் தலைமுறைகள் சமூகவலைதளங்களில் அதிகம் நேரத்தை செலவிடுகிறார்கள். அதுவும், ரீல்ஸ் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரே நாளில் டிரெண்டிங் ஆக வேண்டும் என்பதற்காக ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு பல பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதை பார்க்கிறோம். இதனை மையமாக வைத்துதான் இப்படத்தை இயக்கியுள்ளேன் என இயக்குநர் சிவராஜ் தெரிவித்துள்ளார். ஒரு இளம் தம்பதிகள் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்படும் விபத்து அதற்கு பிறகு சந்திக்கும் பிரச்னைகளை முழுநீள கமர்ஷியல் படமாக இயக்கியிருக்கிறேன்.
யூடியூபர் கலையரசன்
பிரபல யூடியூபர்களாக கலையரசனும், பிரியா லயாவும் நடித்திருக்கின்றனர். எதிர்பாராதவிதமாக ஒரு ஆன்லைன் விளையாட்டிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த ஆன்லைன் கேம் அவர்களை எப்படியெல்லாம் சிக்க வைக்கிறது. இதில் இருந்து தப்பிக்க வழி கண்டுபிடித்தார்களா, தப்பித்தார்களா என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்ல முயற்சித்திருக்கிறோம். கண்டிப்பாக இன்றைய தலைமுறை பார்க்க கூடிய படமாக இருக்கும். குறிப்பாக ஆன்லைனில் மூழ்கி கிடக்கும் தம்பதிகள் பார்க்க வேண்டிய படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.