இந்தியன் 2
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இறுதிகட்டமாக படக்குழு கேரளாவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் , சித்தார்த் , பாபி சிம்ஹா , மற்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசினார் கமல். அவர் பேசுகையில் ‘ ஒவ்வொரு முறையும் நான் கேரளா வரும்போது நாஸ்டால்ஜிக் ஆகிவிடுகிறேன். எனக்கு இங்கு நிறைய நடிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். என்னை செதுக்கியதில் கேரளாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. நான் ஒரு பொருளாக இருந்தால் அதில் மேட் இன் கேரளா என்று தான் போட்டிருக்கும் . நான் தமிழ் நாட்டிற்கு மட்டும் சொந்தமானவன் இல்லை. அதனால் தான் நான் இன்று பான் இந்திய நடிகராக இருக்கிறேன்” என்று கமல் தெரிவித்தார்.
கேரள கலைஞர்களை பெருமையாக பேசிய கமல்
இந்தியன் 2 படத்தில் சேனாதிபதி கேரக்டருக்கு மேக் அப் போட்டு நடித்தது குறித்து பேசிய கமல் “ கேரளாவில் தெய்யம் நடனக் கலைஞர்களுக்கு பொறுமையாக நீண்ட நேரம் ஒப்பனை செய்துகொள்வதில் இருக்கும் சிரமம் நன்றாகவே தெரியும் என்று பேசினார்.
இந்தியன் படக்குழுவுக்கு விருந்து வைத்த ஜோஜூ ஜார்ஜ்
கேரளாவில் ப்ரோமோஷனிற்காக சென்றிருந்த இந்தியன் 2 படக்குழுவினருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள். கேரள திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் கமலை சிறப்பான வரவேற்த்துள்ளார்கள். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனது இல்லத்தில் சமைத்த உணவை படக்குழுவினருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல் , சித்தார்த் , பாபி சிம்ஹா , ஜோஜூ ஜார்ஜ் , மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.
தக் லைஃப்
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் காட்சியில் ஜோஜூ ஜார்ஜ் தவறி விழுந்தார் . இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது ஜோஜூ ஜார்ஜ் கொச்சியில் தனது இல்லத்தில் ஓய்வுபெற்று வருகிறார்.