பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது தொடர்பான அனுபவங்களை குறித்து நடிகர் ஜெயராம் பேசியுள்ளார்.
இது குறித்து நடிகர் ஜெயராம் கூறும் போது, “ எந்த மொழி திரைப்படக்கலைஞர்களாக இருந்தாலும் அவர்கள் மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படுவர். அந்த ஆசை எனக்கும் நிறைவேறியது. அதுவும் பொன்னியின் செல்வன் மாதிரியான படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் கிடைத்தது மிகவும் சந்தோஷமான விஷயம்.
அதுவும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம். அது எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பது உங்களுக்கே தெரியும். மணிரத்னம் சார் கூட வேலை செய்வது என்பது அது வேறு மாதிரியான அனுபவம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். 2 நாட்கள் முடிந்த பிறகு நானே மணிசாரிடம் சென்று ஷூட்டிங் இல்லாத போது நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை செய்யலாமா என்று கேட்டேன். அவரிடம் 3 ஆவது நாலாவது அசிஸ்டெண்டா இருந்தா போதும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
கதை சொல்லி முடித்த உடனே மணி சார் முழுவதுமாக மொட்டைப் போட்டு விட வேண்டும். அடுத்த ஒன்றரை வருடங்கள் தலையில் முடியே இருக்க கூடாது. பின்னால் குடும்பி மட்டும் இருக்க வேண்டும் என்றார்.
3 மணிக்கு எழுந்து விட வேண்டும். 3.40 க்கெல்லாம் ஸ்பாட்டுக்கு வந்து விட வேண்டும். தினமும் காலையில் ஷேவ் செய்ய வேண்டும். ஸ்பாட்டுக்கு சென்றால் 1000 பேர் நிற்பார்கள். உணவு காலையில 4, 4.30 க்குள்ள ரெடியாக இருக்கும். 6 மணிக்கு முதல் ஷாட் வைக்கப்பட்டு ஷூட்டிங் ஆரம்பித்து விடும்” என்றார்.