ஜெயம் ரவி
சமீபத்தில் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தனது மனைவி ஆர்த்தியுடனான திருமணம் உறவை முடித்துக்கொள்வதாக ஜெயம் ரவி அறிவித்ததில் இருந்து அடுத்தடுத்து பல அதிர்ச்சி நிகழ்வுகள் நடந்தேறின. இறுதியாக தனது குடும்ப வாழ்க்கையில் வெளியே சொல்லமுடியாத பல கஷ்டங்களை எதிர்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் ரசிகர்களின் ஆதரவும் அவர் பக்கமே இருந்து வருகிறது.
ஜெயம் ரவி எம் ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தவிர்த்து அவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை , மற்றும் ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெயம் ரவி ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜெயம் ரவி இயக்கும் படத்தில் யோகி பாபு
தனக்கு திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் இருப்பதாக ஜெயம் ரவி முன்பு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கோமாளி படத்தின் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த காம்பினேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கிறார் என்கிற தகவல் இந்த படத்தின் கதை மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெயம் ரவி எதிர்கொண்ட சவால்களை ஒரு காமெடியான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக இந்த படத்தில் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
பிரதர் படக்குழு
பிரதர் திரைப்படம் பூமிகா , பிரியங்கா மோகன் , வி.டி.வி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ரோமான்ஸ் காமெடி கலந்த பக்கா ஃபேமிலி என்டர்டெயினர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.