தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம்ரவி. இவர் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர். இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.


தீபாவளி வெளியீடாக வர உள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் நடிகர் ஜெயம்ரவி புதியதாக படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒரே ஒரு வருத்தம்:


இந்த சூழலில், நடிகர் ஜெயம்ரவி பிரதர் படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, “ நான் ஆளவந்தானில் உதவி இயக்குனராக சேர்ந்தபோது டைரக்‌ஷன் கற்றுக்கொள்ளவேண்டும் என்று போகவில்லை. கமல் சாரைப் பார்த்துவிட்டு அவர் என்ன செய்கிறாரோ அதை அப்படியே காபி அடித்தால் போதும் என்றுதான் போனேன். அவரை காப்பி அடிக்க யாராலும் முடியாது. ஆனால், அவரைப் பார்த்து இன்ஸ்பயர் ஆனேன். பலர் ஆகியிருக்காங்க. அதில் நானும் ஒருத்தன்னு பெருமையா சொல்லிக்குறேன்.






அவர் எல்லா விதமான கதாபாத்திரங்களும் செய்திருக்கிறார். சினிமாவில் அவர் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் இன்று நியூஸ் ஆகிகிட்டு இருக்குது. அந்த மாதிரி ஒருத்தர்கூட வேலை பாத்தது பெருமைதான். மணி சாரோட தக் லைஃப் படத்துல நான் இருந்தேன். ஒரு சில காரணத்தால் நான் இல்லாம போயிட்டேன். அதுதான் எனக்கு ஒரே ஒரு வருத்தம்.”


இவ்வாறு அவர் கூறினார்.


தீபாவளிக்கு வரும் பிரதர்:


ஜெயம் ரவி நடிப்பில் ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய காமெடி படங்களை  இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது பிரதர். இந்த படத்தில் ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா நடித்துள்ளார்.


அக்கா – தம்பி பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்ரமணியம், விடிவி கணேஷ், யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தீபாவளி விருந்தாக இந்த படம் வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.


தக் லைஃப்பில் விலகிய கமல்:


ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான இறைவன், சைரன் ஆகிய படங்கள் பெரியளவு வெற்றி பெறவில்லை. கோமாளி படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி மிகப்பெரிய வெற்றிப்படம் அளித்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மணிரத்னம் இயக்கும் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் சிம்பு கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ஜெயம்ரவி. ஆனால், கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் அவர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.