நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவரின் முதல் படமாக ஜெயம் 2003 ஆம் ஆண்டு இதே தேதியில் வெளியாகியிருந்தது.
எதிர்பார்ப்பே இல்லாத படம்
2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ படத்தின் ரீமேக் தான் தமிழிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளராக இருந்த எடிட்டர் மோகனின் இரு மகன்களான ராஜா மற்றும் ரவி இப்படத்தில் வாரிசு பிரபலங்களாக அடியெடுத்து வைத்தனர். ராஜா இப்படத்தை இயக்கிய நிலையில் ரவி ஹீரோவாக அறிமுகமானார். ஜெயம் படத்தில் ஹீரோயினாக சதா அறிமுகமாகியிருந்தார். மேலும் கோபிசந்த் , ராஜீவ் , பிரகதி, நிழல்கள் ரவி , நளினி , செந்தில் , சுமன் செட்டி , மற்றும் ரமேஷ் கண்ணா ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி (ஆர்.பி.பட்நாயக் என்ற பெயரில்) இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பரிதாபத்தை ஏற்படுத்திய காட்சிகள்
கல்லூரியில் படிக்கும் சதாவுக்கு ஜெயம் ரவி மீது ஒரு சந்தர்ப்பத்தில் காதல் ஏற்படுகிறது. அதேசமயம் வீட்டில் சிறுவயதில் சதாவுக்கு, கோபிசந்திற்கும் பிற்காலத்தில் திருமணம் செய்து வைக்கலாம் என பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். சிறுவயது பிரச்சினையால் சதாவை பார்க்காமல் இருக்கும் எதிர்மறை குணங்கள் கொண்ட கோபி சந்த் பல ஆண்டுகளுக்குப் பின் அவரைப் பார்த்தவுடன் திருமணம் செய்ய நினைக்கிறார். ஜெயம் ரவி காதல் நிறைவேறியதா? கோபி சந்தின் ஆசை நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
திரைக்கதையில் இரத்தம் சொட்ட கோபிசந்திடம் ஜெயம் ரவி அடிவாங்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இது சாதாரண ரவியை ‘ஜெயம்’ ரவியாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. மேலும் இந்த படத்திற்கு பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தது. இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் படமாகவும் இது அமைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 25 கோடி வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த படம் ரிலீஸான சமயத்தில் முதல் வாரம் பெரிய அளவில் ரசிகர்கள் தியேட்டருக்கு வரவில்லை. ஆனால் ஊடகங்களில் வெளியான விமர்சனம், படம் பார்த்தவர்கள் சொன்ன பாசிட்டிவ் கருத்துகள் காரணமாக குடும்பம் குடும்பமாக இப்படத்திற்கு ரசிகர்கள் வருகை தந்தனர்.