காஞ்சிபுரம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியை 18 மாதங்கள் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியைச் சேர்ந்தவர் துளசிதாஸ் (42). வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம் (45). இருவரும் ஒரகடம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரவு டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டிக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது கடைக்கு அருகாமையில் பதுங்கி இருந்த இருவர் துளசிதாஸை கூர்மையான இரும்பு ஆயுதத்தின் மூலம் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவத்தை தடுக்க சென்ற ராமுவையும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

 

முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்து

 

இதில் பலத்த படுகாயம் அடைந்த துளசிதாஸ் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ராமு உடல்நிலை குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருந்த பொழுது,  முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி கொண்டு வெளியில் எடுக்கப்பட்டது.   டாஸ்மாக் ஊழியர் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் (25). என்பவனை போலீசார் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான அரவிந்த் குமார் ராம் (26). என்பவனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.  இந்த நிலையில் தலைமறைவு குற்றவாளி பீகாரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் பீகாருக்கு சென்று அரவிந்த் குமார் ராமை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து ஒரகடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

 

இருவருக்குமிடையே பிரச்சனை 

 

அரவிந்த் குமார் ராமிடம் போலீசார் விசாரணை செய்ததில் உமேஷ் குமார் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து தனியார் ஆலையில் வேலை செய்து வந்தார். கொலை சம்பவம் நடந்த சில தினங்களுக்கு முன்பு உமேஷ் குமார் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கியுள்ளார். அப்பொழுது இருவருக்குமிடையே பிரச்சனை எழுந்ததுள்ளது . மேலும் பீகார் மாநிலத்தில் இருந்து வந்து தன்னிடமே தகராறு செய்கிறாயா என துளசிதாஸ் உமேஷ் குமாரை  இழிவு படுத்தி பேசி அனுப்பியுள்ளார்.

 

இதனால் கடும் கோபம் அடைந்த உமேஷ் குமார் புறப்பட்டு பீகாருக்கு சென்றுள்ளார்.  பின்னர் நடந்துவற்றை தன்னிடம் கூறியதையடுத்து துளசிதாஸை கொலை செய்ய திட்டம் தீட்டி பீகாரிலிருந்து துப்பாக்கி வாங்கி வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியதை போலீஸிடம் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து கடந்த 18 மாதமாக  தலைமறைவாக இருந்த அரவிந்த் குமார் ராம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.