பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பை நினைத்து பெருமைப்பட்டதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2
இயக்குநர் மணி ரத்னத்தின் கைவண்ணத்தில் "பொன்னியின் செல்வன்” நாவல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான நிலையில், இரண்டாம் பாகம் நாளை உலகமெங்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஐஸ்வர்யா லட்சுமியை புகழ்ந்த ஜெயம் ரவி
இந்நிலையில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா உள்ளிட்ட பலரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, “எல்லோருக்கும் வணக்கம். மனசு நிறைஞ்சி சொல்றேன் ரொம்ப சந்தோசமா இருக்கு. பொன்னியில் செல்வன் 2 நாளை ரிலீசாகப்போகுது. அதுக்கான சந்திப்பா இதை நான் நினைக்கல. கார்த்தி என்கிட்ட சொன்னாரு. இந்த நாவல் ஏற்கனவே ஹிட். அதனால் ஹிட்டுல தான் நாம இருக்கணும்ன்னு பாசிட்டிவா சொல்வாரு. இப்ப நாம நாவல், பொன்னியின் செல்வன் - 1 என இரண்டு ஹிட்டுல இருக்குறோம்.
இது சாதாரண விஷயம் கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கோம். ஒரு 150 நாள்ல இரண்டு பாகம் எடுக்குறது சாத்தியம் கிடையாது. ஆனால் இன்னைக்கு சாத்தியமாக காரணம் மணிரத்னம். அவருக்காக நாங்க பண்ண விஷயங்கள் தான். கைதேர்ந்த நடிகர்களை ஒருங்கிணைத்து அவர் பண்ணதெல்லாம் பெரிய விஷயம். அதுவும் மக்கள் கொடுத்த வரவேற்பும் மட்டுமே இத்தகைய வெற்றிக்கு காரணம். அதே சப்போர்ட் 2 ஆம் பாகத்திற்கும் கிடைக்கும் என நம்புறேன்.
ஐஸ்வர்யா லட்சுமி மீது ரொம்ப மரியாதை ஏற்பட்டுள்ளது. நானும் அவரும் யானை மேலே போகும் மாதிரி ஒரு காட்சி உண்டு. அந்த காட்சியில் கயிறு உட்பட எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் தைரியமாக யானை மேல் உட்கார்ந்து இருந்தார். ஜாக்கிசானின் வேறோரு வெர்ஷனை பார்த்தேன். யானையின் மேல் எனக்கு பின்னால் அவர் உட்கார்ந்து இருப்பார். நான் என்னை வேண்டுமானால் பிடித்துக் கொள்ளுங்கள் என சொன்னேன்.
அதற்கு, “ஒரு ராஜாவை அப்படி யாரும் தொட்டுற முடியாது” என கேரக்டராகவே இருந்தார். (அப்போது என்னம்மா நீ இப்படி இருக்குறீயேமா என டயலாக் சொல்லி கலாய்த்தார்) அவரை நினைத்து அன்று பெருமைப்பட்டேன். முதலில் அவர் இவ்வளவு பெரிய இயக்குநர், குழுவுடன் படம் பண்ணும்போது அதனை புரிந்து கொண்டு, அந்த ஒரு வாய்ப்பை அழகாக பயன்படுத்தி கொண்டுள்ளார். அவருக்கு இந்த மாதிரி 100 படங்கள் வர வேண்டும். ஐஸ்வர்யாவுடன் பணிபுரிய வேண்டும் என நினைக்கிறேன்.