ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரண்ஸ்.  எஸ் ஜே சூர்யா , நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.


 பாராட்டுக்களைப் பெறும் நடிகர்கள்


ஜிகர்தண்டா படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறார். மேலும் அவர் இதுவரை  இயக்கிய படங்களில் சிறந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அடுத்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படத்தில் அவர் நடித்திருக்கும் அல்லியஸ் சீசர் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். எப்போதும்போல் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லனாக  நடித்த நவீன் சந்திராவும் மக்களால் பாராட்டப்படுகிறார்.


ஃபார் மை பாய் (FOR MY BOY)


இவர்களைத் தவிர்த்து இளவரசு நடித்திருக்கும் கார்மேகம் கதாபாத்திரம் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அல்லியஸ் சீஸர் மற்றும் கார்மேகம் ஆகிய இருவருக்கும் இடையில் மிக அழகான ஒரு உறவை கட்டமைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.


அதிலும் குறிப்பாக கார்மேகம் அல்லீயஸ் சீசரை ’மை பாய்’ என்று அழைப்பது க்ளைமேக்ஸ் காட்சியில் ஃபார் மை பாய் என்று அவர் சொல்லும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கார்மேக கதாபாத்திரத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து  நடிகர் இளவரசு இப்படி கூறியிருக்கிறார்.


’ஃபார்  மை பாய் “ என்று படத்தில் வரும் வசனம் அல்லீயஸ் சீசர் மற்றும் கார்மேகத்திற்கும் இடையில் இருக்கும் உறவை நமக்கு விளக்குகிறது. இந்த வசனத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வசனத்தை இப்படிதான் பேச வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எதுவும் சொல்லவில்லை. என்னுடைய இயல்பில் இருந்தே இந்த வசனத்தை என்னை பேச அனுமதித்தார். அதுதான் என்னைப் போன்ற ஒரு நடிகருக்கு கிடைக்கும் சுதந்திரம். அதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருக்கும். ஜிகர்தண்டா படத்திற்கு இந்த வசனத்திற்கு இவ்வளவுப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது”  என்று நடிகர் இளவரசு கூறியிருக்கிறார்.