ஹரிஷ் கல்யாண்
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , பார்க்கிங் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது.
தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் அசோக் செல்வன் , மணிகண்டன் , ஹரிஷ் கல்யாண் , கவின் உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் கவின் ரசிகர்கள் இடையில் ஒரு சிறு மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருந்த ஸ்டார் படத்தில் கவின் நடித்தபின் இந்த மோதல் பெரிதாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் Vs கவின் என்று சமூக வலைதளங்களில் சண்டைகள் நடந்து வருவது வழக்கமாகியுள்ளது
கவின் எனக்கு போட்டியா
நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய ஹரிஷ் கல்யாண் இப்படி தெரிவித்துள்ளார் " இரண்டு நடிகர்களுக்கு இடையிலான போட்டி என்பது எப்போதும் இருந்து வருகிறது. ரஜினி - கமல் , எம்.ஜி.ஆர் - சிவாஜி , அஜித் - விஜய் என எப்போது இந்த போட்டி இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் நடிகர்களுக்கு இடையில் போட்டி என்பது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இரண்டு நடிகர்களுக்கான போட்டியாக இல்லாமல் பல நடிகர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்க வேண்டும். கவின் மட்டுமில்லாமல் நிறை இளம் நடிகர்கள் தங்கள் திறமைகளுக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான கதைகளை கொடுத்து வருகிறார்கள். நடிகர்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டி இருப்பது இந்த துறைக்கு நல்லது. இதனால் மக்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை எனக்கு பெரிய சவாலாக இருப்பது என்னுடைய முந்தைய படம் தான். என்னுடை முந்தைய படத்தைவிட அடுத்த படத்தில் புதிதாக என்ன செய்ய முடியும் என்பதே என்னுடைய நோக்கமாக இருக்கிறது" என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்