ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரெபல் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியான நிலையில் இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அதேசமயம் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். நடப்பாண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ரெபல் படம் வெளியாகவுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். ரெபல் படத்தை இயக்கியுள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி பிரகாஷே இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
முன்னதாக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். நேர்காணல் ஒன்றில் இப்படம் பற்றி சில தகவல்களை தெரிவித்திருந்தார். அதாவது, ரெபல் படம் 1980களில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது’ என தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று ரெபல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. இப்படம் தமிழக கேரள எல்லைப்பகுதியாக பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கல்லூரியில் நடக்கும் மாணவர் தேர்தலில் தமிழ்நாடு - கேரளா மாணவர்களிடையே ஏற்படும் அரசியல் மோதல் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
இந்த ட்ரெய்லரில், ‘உன்னை இங்க படிக்க விட்டதே பெரிய விஷயம்..என் ஊர்ல வந்து என்னுடைய கட்சிக்கும், மொழிக்கும் எதிரா இருப்பியா” என தமிழ்நாடு மாணவர்களை கேரள மாணவர்கள் கேட்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல், ‘தமிழனாக பிறந்தால் தப்பா?.. தமிழனின் ஓட்டு தமிழனுக்கே’ என கவனிக்க வைக்கும் வசனங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர் தனுஷ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13, கள்வன், டியர் உள்ளிட்ட சில படங்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வருகிறார். அதேசமயம் தங்கலான், எமர்ஜென்சி, சர்ஃபியா, அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், சூர்யா 43, சியான் விக்ரம் 62 ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Khushbu: தாய்மார்களுக்கு ரூ.1,000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்கு கிடைக்குமா? - குஷ்பூ சர்ச்சை பேச்சு