வணிக வளாகம் கட்டுவதற்காக, நடிகர் கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கவுண்டமணி வழக்கு:
தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டாடப்படும் ஒரு காமெடி நடிகர் கவுண்டமணி. 80, 90 கால கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். செந்தில், கவுண்டமணி காமெடிக்காகவே படத்தை பார்த்தவர்கள் என ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்
நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.
கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், 2003 ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், நடிகர் கவுண்டமணி இடம் இருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
2019 ஆம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது. வணிக வளாகம் கட்டுவதற்காக, நடிகர் கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை” - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸி படம்!