நடிகை காயத்ரி என்றவுடன் நமக்கெல்லாம் முதலில் கண் முன் வருவது.. ப்பா யாருப்பா இந்தப் பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு என்று விஜய் சேதுபதி பேசும் டயலாக் தான். ஆனால் தன் அபார நடிப்பால் இப்ப ரசிகர்கள் இவரைப் பார்த்து ப்பா.. என்று கைதட்டுகின்றனர். அதுவும் அண்மையில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம், மாமனிதன் என்று அனைத்து படங்களுமே மாஸ் ஹிட் தான்.


அதில் மாமனிதன் படத்தில் தான் நடித்த அனுபவம் பற்றி ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் பேசியிருக்கிறார் காயத்ரி. அந்தப் பேட்டியில் அவர், நான் மாமனிதன் படத்தில் ஒப்பந்தமானபோது அந்தக் கேரக்டர் 90களில் வரும் கதாபாத்திரம் என்றார். உடனே நான் இயக்குநர் சீனு ராமசாமி சாரிடம், சார் எனக்கு அந்தக் காலத்தில் எப்படி பெண்கள் இருப்பார்கள் என்பது போன்ற சில விஷயங்களைச் சொல்லுங்க. நான் என்ன மாதிரி ஹோம் ஒர்க் பண்ணனும்னு சொல்லுங்க சார். அது மாதிரி நான் பண்ணிட்டு வரேன் என்றேன். உடனே சீனு சார், இங்க பாருங்க மா எங்க ஊரு பொண்ணுங்க புருவத்த திருத்த மாட்டாங்க.. அதனால நீங்க புருவத்த திருத்தீங்க என்றார். அதைக் கேட்க எனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு ஆனால் படத்துக்காக முழுக்க முழுக்க நான் அப்படித்தான் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.


பாராட்டிய விசே:


யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் 'மாமனிதன்'. 


இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிராமா திரைப்படமான மாமனிதன் அண்மையில் ரிலீஸ் ஆனது. ஸ்டுடியோ 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிட்டார்.
பட ரிலீஸுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு சுவாரஸ்யங்களைப் பகிர்ந்திருந்தார், “நீங்க நடித்தால் நானும் அப்பாவும் இசையமைக்கறோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி தொடங்கிய படம்தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி இந்தப் படத்தை அப்படித்தான் உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிப்பட்ட நடிகர் குரு சோமசுந்தரம்.  அவருடன் நடித்தது மகிழ்ச்சி.  




பலர் நடிக்க ஒப்புக்கொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிக்கொண்டுவரப்படவில்லை. இந்தப் படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும் இளையராஜாவும் இணைந்து என் படத்துக்கு இசையமைக்கும் இந்த வாய்ப்பு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்தப் படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்கள் அனைவருக்கும் இருக்கும்” என்று கூறியிருந்தார். 


கணவர்களுக்கும் எனக்கும் ராசியில்லை:


முன்னதாக இன்றுவரை அவரது மூன்று சிறந்த படங்களில் அவரது கதாபாத்திரங்களில் உள்ள ஒற்றுமைகளுக்கு பதிலளித்த காயத்ரி, கணவர்களுக்கும் தனக்கும் ராசியில்லை என்று நகைச்சுவையாக கூறினார். அவரது பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.