நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வெளியான 1947, ஆகஸ்ட் 16 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், ஸ்பைடர், தர்பார் என பல படங்களை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கினார். இதனிடையே ஏ.ஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்  மூலம் அவர் படங்களையும் தயாரித்துள்ளார். மான் கராத்தே, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என பல வெற்றி படங்களை அவர் தயாரித்திருந்தார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான படம் 1947, ஆகஸ்ட் 16. 


இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தார்.அந்த விழாவில் ஏ.ஆர்.முருகதாஸூடன் தான் இணைய உள்ளதை சிவா தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 






இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸிடம் 8 வருடங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய என். எஸ் பொன்குமார் இயக்கிய படம், 1947, ஆகஸ்ட் 16. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி , புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நமது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்காடு எனும் கிராமத்தில் வாழும் மக்களை அடிமைபோல் வேலை வாங்கும் ராபர்ட் க்ளைவ் என்பவருக்கும், அவ்வூர் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 


சீன் ரோல்டன் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் தொடங்கி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், ட்ரெய்லர் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றது. பத்து தல படத்திற்கு பிறகு இந்த படம் கௌதம் கார்த்திக்கிற்கு நல்ல ரிசல்டை கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.