திரையுலகில் தந்தை நடிகராக இருந்தால் மகனும் நடிகராக தான் இருப்பார் என்ற கூற்று உண்டு. ஏனென்றால் இதற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் சான்றுகள் உள்ளன. இந்தச் சூழலில் தென் இந்திய திரையுலகை அலங்கரித்த டாப் நடிகர்கள் மற்றும் அவர்களது மகன்கள் யார் யார்?
சந்திரசேகர்-விஜய்:
தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் பிரபலமான நடிகர் விஜய். இவர் தன்னுடைய தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் அறிமுகம் செய்ததால் திரையுலகிற்கு வந்தார். அதன்பின்னர் தனது கடின உழைப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழ் திரையுலகில் ஒரு பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்தை தற்போது இவர் பெற்றுள்ளார். இவருடைய தந்தை சந்திரசேகர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவ்வப்போது சில படங்களில் நடித்தும் உள்ளார்.
மம்முட்டி-துல்கர் சல்மான் :
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இதுவரை 350 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் மம்முட்டி அதிகம் நடித்துள்ளார். இவருடைய மகன் துல்கர் சல்மான் 2012ஆம் ஆண்டு சேகண்ட் ஷோ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் துல்கர் நடித்த ஒகே கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
நாகார்ஜுனா -நாக சைதன்யா:
தெலுங்கு திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகு மட்டுமல்லாமல் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 3 முறை ஃபிளிம்பேர் விருதுகளை பெற்று அசத்தியுள்ளார். இவருடைய மகன் நாக சைதன்யா ஜோஷ் என்ற திரைப்படம் முலம் மிகவும் பிரபலமானார். தமிழில் அவர் நடிக்கவில்லை என்றாலும் சமந்தாவை திருமணம் செய்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.
சிவக்குமார்-சூர்யா-கார்த்தி:
தமிழ் திரையுலகில் என்றும் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் சிவக்குமார். இவர் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து வந்தார். இவருடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் கதநாயகர்களாக களமிறங்கி தமிழ் திரையுலகில் அசத்தி வருகின்றனர். நடிப்பில் மட்டுமல்லாமல் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல உதவிகளையும் செய்து வருகிறார்.
சிரஞ்சீவி- ராம் சரண் தேஜா:
தெலுங்கு திரைப்பட உலகில் மேகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவராக வலம் வருகிறார். இவர் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய மகன் ராம் சரண் தேஜா தெலுங்கில் நடிகராக அறிமுகமாகி அசத்தி வருகிறார். குறிப்பாக மாகாதீரா என்ற திரைப்படம் மூலம் ராம் சரண் மிகவும் பிரபலமானார்.
பிரபு-விக்ரம் பிரபு:
தமிழ் திரையுலகில் நீண்ட காலம் ஒரு குடும்பம் நடித்து வருகிறது என்றால் அது சிவாஜி குடும்பம் தான். சிவாஜிக்கு பிறகு அவருடைய மகன் பிரபு நீண்ட காலமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருடைய மகன் விக்ரம் பிரபுவும் கும்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அசத்தி வருகிறார்.
அல்லு அரவிந்த்- அல்லு அர்ஜுன் :
தெலுங்கு திரையுலகில் மிகவும் முக்கியமான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த். சிரஞ்சீவியின் மைத்துனரான இவர் அவருடைய கட்சியில் ஒரு முக்கியமான பதவியில் இருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களில் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஸ் ஆகிய இருவரும் நடிகர்களாக உள்ளனர். அல்லு அர்ஜுன் நடித்த புட்டபொம்மா பாடல் சமீபத்தில் மிகவும் வைரலான ஒன்று.
சத்யராஜ்-சிபி சத்யராஜ்:
தமிழ் திரையுலகில் ஹீரோவாகவும் வில்லன் நடிகராகவும் கலக்கியவர் சத்யராஜ். இவர் கிட்டதட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ்,தெலுங்கு,இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மகன் சிபிராஜும் நடிகராக அறிமுகமாகி தனது தந்தையுடன் சில படங்களிலும் நடித்துள்ளார்.
கிருஷ்ணா-மகேஷ்பாபு:
தெலுங்கு திரையுலகை நீண்ட நாட்கள் தன்வசம் வைத்திருக்கும் நடிகர் என்றால் அது மகேஷ் பாபு தான். அவர் 1999ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படத்திற்காக அம்மாநில விருதை பெற்றார். இவருடைய தந்தை கிருஷ்ணாவும் ஒரு பெரிய நடிகர். அவர் 350 படங்களுக்கு மேல் தெலுங்கில் நடித்துள்ளார். அத்துடன் அவரும் ஒரு தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது மகேஷ் பாபுவும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
டி.ராஜேந்தர்-சிம்பு:
தமிழ் திரைப்படங்களில் ஒருவர் கதை திரைக்கதை தயாரிப்பு வசனம் இசை என அனைத்து துறைகளிலும் இருப்பார் என்றால் அது டி.ராஜேந்தர் தான். இவர் தன்னுடைய திரைப்படங்களில் தனது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு முதல் சிம்பு ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.
இவர்கள் தவிர இப்பட்டியலில் அருண் விஜய்- விஜய் குமார், விக்ரம்-துருவ் விக்ரம் உள்ளிட்ட பலரும் உள்ளனர். தென் இந்திய திரையுலகில் பலர் இப்படி கால் பதித்து உள்ளனர். இன்னும் கால் பாதிக்க காத்திருக்கின்றனர்.