பகத் ஃபாசில்


மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார் பகத் ஃபாசில். மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு , கன்னடம் , மலையாள ரசிகர்களிடம் பெரும் ரசிகர்களை கொண்டிருக்கிறார் . சமீபத்தில் வெளியாகிய ஆவேஷம் படத்தின் மூலம் மிகப்பெரிய பான் இந்திய ஸ்டாராக பகத் ஃபாசில் மாறி வருவதை கவனிக்கலாம்.


பான் இந்திய அடையாளம் கொடுத்ததா புஷ்பா?


வடமாநிலங்களில் பகத் ஃபாசிலுக்கு பெரியளவில் ரசிகர்கள் இல்லை என்றாலும் அவரது டப்பிங்கில் வெளியாகும் படங்களில் அவரது முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்கு அவருக்கு அங்கீகாரம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அல்லு அர்ஜூன் படத்தில் புஷ்பா படத்தில் அவர் வில்லனாக நடித்தது என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


புஷ்பா படத்தில் பகத் ஃபாசிலுக்கு குறைவான காட்சிகளே இருக்கும். தற்போது வெளியாக இருக்கும் இரண்டாவது பாகத்தில் அவருக்கு மாஸான காட்சிகள் எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையில் புஷ்பா படம் தனக்கு பான் இந்திய நடிகருக்கான அங்கீகாரத்தை கொடுத்ததா? என்ற கேள்விக்கு, தற்போது பகத் ஃபாசில் வெளிப்படையாக மறுத்துள்ளார்.  


புஷ்பா படம் எனக்கு எதுவும் கொடுக்கவில்லை






ஆவேஷம் படத்தில் நடித்ததற்காக பிரபல யூடியூப் சானலான ஃபிலிம் கம்பேனியன் அவருக்கு  FCGOLD Award வழங்கியது.  இந்த நிகழ்ச்சியில்  பேசிய பகத் ஃபாசில்  “புஷ்பா படம் எனக்கு எந்த அடையாளமும் கொடுக்கவில்லை. நான் இதை படத்தின் இயக்குநர் சுகுமாரிடமே சொல்வேன். நான் எதையும் மறைக்காமல் உண்மையாக இருக்க நினைக்கிறேன். நான் என்னுடைய உழைப்பை மலையாள சினிமாவில் போட்டுக் கொண்டிருக்கிறேன்.


யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் நான் இதை சொல்லவில்லை ஆனால் புஷ்பா படத்திற்கு பின் மக்கள் என்னிடம் மேஜிக் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் அந்த படத்தில் நடித்தது சுகுமார் சாரின் மீதான அன்பிற்காகவும் தொழில் நிமித்தமாகவும் தான். என்னுடைய சினிமா என்பது இங்கு மலையாளத்தில் இருக்கிறது. என்னுடைய களம் மலையாள சினிமா தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.” என்று பகத் ஃபாசில் கூறினார்.


 மீண்டும் வடிவேலு ஃபகத் கூட்டணி


தமிழைப் பொறுத்தவரை பகத் ஃபாசில் தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வடிவேலுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார் பகத் ஃபாசில்.




மேலும் படிக்க : Kurangu Pedal Movie Review: நாஸ்டால்ஜியாவை தூண்டும் சிவகார்த்திகேயன் படம்... குரங்கு பெடல் திரை விமர்சனம்!