சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் குரங்க பெடல். மதுபானக்கடை படத்தின் மூலம் கவனமீர்த்த கமலகண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். குரங்கு பெடல் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
நாஸ்டால்ஜியா வியாபாரம்
90 கிட்ஸ்களை வைத்து இன்று ஊடகத் துறையில் நடந்துவரும் மிகப்பெரிய வியாபாரம் நாஸ்டால்ஜியா வியாபாரம். 90 களில் ஒளிபரப்பான சக்திமான் இன்று படங்களாக எடுக்கப்படுகின்றன. ஐ.டி நிறுவனங்களின் வாசலில் இருக்கும் கஃபேக்களில் 90ஸ் கிட் விருப்பப்பட்டு சாப்பிட்ட தேன் மிட்டாயில் தொடங்கி பல மிட்டாய்கள் தனியாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒருகாலத்தில் 2 ரூபாய்க்கு வாங்கிய இலந்தை வடு இன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டேஸ்ட் என்னவோ ஒன்றுதான். ஆனால் நாஸ்டால்ஜியாவுக்கு கொஞ்சம் காசு கொடுக்க வேண்டி இருக்கிறது. கமலகண்ணன் இயக்கியிருக்கும் குரங்கு பெடல் படத்திலும் இந்த நாஸ்டால்ஜியா பிஸினஸ் இருக்கிறது. சரி விமர்சனத்திற்கு வரலாம்.
குரங்கு பெடல் திரை விமர்சனம்
1980 களில் சேலம் மாவட்டத்தின் கத்தேரி கிராமத்தில் நடக்கிறது இப்படத்தின் கதை. 1980 கள் என்று சொன்னாலும் அதற்கான சூழலை உருவாக்க பெரியளவில் எந்த மெனக்கெடலும் படத்தில் இல்லை. 1980 என்பதற்கு பதிலாக 2000 ஆம் ஆண்டு என்று வைத்திருந்தால் ரசிகர்கள் வரலாற்று பிழை என்று கோபித்திருக்க மாட்டார்கள்.
பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறையை எப்படி கழிக்க வேண்டும் என்ற்ய் திட்டம் தீட்டுகிறார்கள் கதையின் நாயகர்களான நான்கு சிறுவர்கள். சுட்டெரிக்கும் வெயிலில் ஆட்டம்போடுவது , நுங்கு திருடி சாப்பிடுவது , கிணற்றில் குளிப்பது என எல்லா வகையிலும் கோடை வெயிலில் திளைக்கிறார்கள். வசந்தபாலனின் வெயில் படத்தில் வெயிலோடு விளையாடி பாடலை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. ஆனால் வெயிலோடு விளையாடி பாடல் இன்றுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கை அனுபவத்தை பார்க்கும் ஒரு பரவசத்தை எழுப்புகிறது. குரங்கு பெடல் பொறுத்தவரை அவை வேண்டுமென்றே நாஸ்டால்ஜியாவை தூண்டும் வகையில் காட்சிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன.
இந்த முறை கோடை விடுமுறையில் எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் மாரியப்பனும் அவனது நண்பர்களும். மற்ற சிறுவர்களைக் காட்டிலும் மாரியப்பன் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்வதற்கு ஒரு கூடுதல் காரணமும் இருக்கிறது. மாரியப்பனின் தந்தை கந்தசாமி ( காளி வெங்கட்) சைக்கிள் ஓட்டதெரியாததால் எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்லக்கூடியவர். ஊரே கர்ணன் படம் பார்க்க சினிமா கொட்டகைக்கு சைக்கிளில் செல்லும்போது தனது மகனையும் மனைவியையும் நடையாக நடக்கவைத்து கூட்டிச் செல்கிறார். இதனாலேயே ஊருக்குள் அவருக்கு நடராஜா சர்வீஸ் என்று பட்டபெயர் கிடைத்துவிடுகிறது. அந்த பெயர் மாரியப்பனுக்கும் வராமல் இருக்க வேண்டும் என்றால் அவன் சைக்கிள் ஓட்டி பழக வேண்டும். மாரியப்பன் சைக்கிள் ஓட்டப் பழகி நடராஜா சர்வீஸ் என்கிற பெயரில் இருந்து தப்பித்தானா இல்லையா என்பது படத்தின் மிதிக் கதை.
விமர்சனம்
குழந்தைகளில் உலகத்தை வைத்து உருவான மிக அற்புதமான படங்களில் ஒன்று இராணிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய சில்ரன் ஆஃப் ஹெவன் . தமிழைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க குழந்தைகளை சுற்றி நடக்கும் கதை என்றால் அஞ்சலி , பூவரசம் பீப்பி , சமீபத்தில் வெளியான கூழாங்கல் ஆகிய படங்களை குறிப்பிடலாம். இந்த இடத்தை ஒரு சின்ன விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். குழந்தைகளுக்கான சினிமா வேறு குழந்தைகளை வைத்து உருவாகும் சினிமா வேறு.
உலகம் முழுவதுமாக குழந்தைகளுக்கான சினிமா , குழந்தைகளுக்கான இலக்கியம் ஆகிய பிரிவுகளில் படைப்புகள் வெளியாகின்றன. அந்தந்த வயதில் குழந்தைகள் இந்த படைப்புகளை படிக்கலாம். குழந்தைகளை வைத்து உருவாகும் சினிமா என்பது பெரியவர்களுக்கானது. குழந்தைகளின் வாழ்க்கை வழியாக வளர்ந்த மனிதர்களுக்கு ஒரு உண்மை உணர்த்தப்படுகிறது. மேல் குறிப்பிட்ட படங்கள் இந்த வகைமைக்குள் வருபவை.
ஆனால் குரங்கு பெடல் குழந்தைகளின் உலகத்திற்குள் குழந்தைகளுக்கான படமாக மட்டுமே இருந்துவிடுகிறது. படத்தில் இருக்கும் பிற கதாபாத்திரங்களுக்கு பெரியளவில் கதையில் அர்த்தம் இல்லை. ரிடையர்டு மிலிட்டரியாக இருந்து சைக்கிள் கடை வைத்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் , குடிகாரனாக வரும் ஜென்சன் திவாகர் , தந்தையாக வரும் காளி வெங்கட் என எல்லா கதாபாத்திரங்கள் மேலோட்டமாக கையாளப் பட்டிருக்கின்றன. மையக் கதையோடு இன்னும் நெருக்கமாக இந்த கதாபாத்திரங்கள் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது துண்டு துண்டாக அவரவரளவில் முழுமை பெற்றிருக்கலாம்.
முக்கிய கதாபாத்திரமான மாரியப்பனின் உணர்வுகளை நாம் இயக்குநரின் கண்களின் வழியாக மட்டுமே பார்க்கிறோமே ஒழிய அவனது உணர்ச்சிகளோடு ஒன்றுவதில்லை.
கொஞ்ச நேரம் நாஸ்டால்ஜியா , கொஞ்ச நேரம் ஒரு கனவை நிறைவேற்றும் ஒரு சிறுவனின் போராட்டமாக , கொஞ்ச நேரம் ஒரு குட்டி பயணமாக , கொஞ்ச நேரம் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு என பல கோணங்களில் இந்த படத்தை இன்னும் உணர்வுப்பூர்வமாக ஏற்ற திரைமொழியில் சொல்லியிருக்கலாம். ஆனால் இயக்குநர் மற்றும் கதையாசிரியர்கள் கதை மிக எளிமையாகவே கையாள முடிவு செய்திருக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அது மாறிவிடுகிறது. இன்னொரு பக்கம் ஒளிப்பதிவு ஒரு கோர்வையே இல்லாமல் இருக்கிறது. ஃபாலோ அப் ஷாட்கள் சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கின்றன ஆனால் ஸ்டேடிக் ஷாட்கள் தேவையற்ற வகையில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
சைக்கிளின் கம்பி வழியாக கேமரா வைப்பது , ஸ்டெடி கேம் வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டே இருப்பது என கதைக்கு தேவையே இல்லாத ஒரு அம்சத்தை வளிந்து திணிப்பது போல் இருக்கிறது.இப்படி ஒரு முழுமையான படமாக இருப்பதில் குறைகள் இருந்தாலும் இப்படத்தில் இருக்கும் குழந்தைகளிம் மொழி நம்மை மற்ற எல்லாவற்றையும் விட அதிகம் கவர்கிறது. கொங்கு வட்டார பேச்சுவழக்கில் இந்த குழந்தைகளில் குரல் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. சினிமாத்தன்மையோடு நடித்திருந்தாலும் சிறுவர்களாக நடித்த அனைத்து பேரும் தங்களை மறந்து கதையுடன் ஒன்றியிருப்பதால் அவர்களின் விளையாட்டுக்களை பார்வையாளர்களாக நம்மால் நம்ப முடிகிறது. ஜிப்ரானின் இசை பெரியளவில் கவரவில்லை.குரங்கு பெடல் இரண்டு கால்களையும் தூக்கி போட்டு சீட்டில் உட்கார்ந்து சைக்கிள் ஓட்டியிருக்கலாம்.