வேட்டையன் (Vettaiyan) படத்தில் தான் ஹ்யூமர் கேரக்டரில் நடித்துள்ளதாக நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.


வேட்டையன்


த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கேரளா, திருநெல்வேலி, தூத்துக்குடி, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.


ஃபகத் ஃபாசில்


வேட்டையன் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத் ஃபாசில் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் வழியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார்.  கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது ரஜினியுடன் அவருடைய கூட்டணி எப்படியானதாக இருக்கப் போகிறது என்பது எதிர்பாப்புகளை அதிகரித்துள்ளது. 


ரஜினி படத்தில் ஹ்யூமர்


தமிழில் நடித்த இரண்டு படங்களில் வில்லனாக நடித்துள்ள ஃபகத் ஃபாசில் இந்த முறை சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார்.


அதன்படி வேட்டையன் படத்தில் தான் ஹ்யூமரான ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் ஃபகத் ஃபாசில். மலையாளப் படங்களில் ரொமான்ஸ், காமெடி, சீரியஸான ரோல்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதல் முறையாக ஹ்யூமர் கேரக்டரில் அவர் நடித்துள்ளது ரசிகர்களை பொறுத்தவரை ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 






ஆவேஷம்


ஃபகத் ஃபாசில் நடிப்பில் நாளை ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ஆவேஷம். ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ரோமான்ச்சம் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இருமொழி ரசிகர்களிடமும் பரவலாக பேசப்பட்டது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.