சசிகுமார்


இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சசிகுமார்  2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எல்லா காலத்திலும் கொண்டாடப்படும் கிளாசிக் திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஈசன் படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து படங்களை இயக்க திட்டமிட்டிருந்த சசிகுமார் பின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடோடிகள் , சுந்தரபாண்டியன் , குட்டி புலி , கிடாரி , அயோத்தி , கருடன் என இவர்  நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


கடன் பிரச்சனையால் நடிக்க வந்தேன்


நந்தன் படத்திற்கான ப்ரோமோஷனின் போது நடிகர் சசிகுமார் ஏன் அடுத்தடுத்து படங்களை இயக்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த சசிகுமார் " ஈசன் படத்திற்கு அடுத்தபடியாக நான் ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அப்போது இருந்த கடன் பிரச்சனைகளால் என்னால் படங்களை இயக்க முடியாமல் போனது. ஒரு படம் இயக்க எனக்கு எப்படியும் ஒரு ஆண்டு தேவைப்படும். அதனால் தான் நான் நடிக்கத் தொடங்கினேன். இப்போது என்னுடைய கடனை எல்லாம் சமாளித்துவிட்டேன். தற்போது எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இதுவரை நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் கையில் இல்லை அது இன்னொருவர் கையில் இருந்தது. இப்போதான் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நான் நடிக்கத் தொடங்கி இருக்கிறேன். இந்த படங்களில் நடித்துவிட்டு நான் எழுதி வைத்திருக்கும் கதைகளை இயக்கப்போகிறேன். அதே நேரம் நான் இயக்கும் படங்களில் நானே நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்று சசிகுமார் தெரிவித்துள்ளார். 


நந்தன்


இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ருதி பெரியசாமி , எஸ் மாதேஷ் , பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அயோத்தி , கருடன் ஆகிய படங்களுக்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் நந்தன் திரைப்படம் திரை வட்டாரங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அயோத்தி படத்தைப் போல்வே இப்படம் சசிகுமார் நடித்த படங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு படமாக இருக்கும் என்று  எதிர்பார்க்கப் படுகிறது