எ.ஸ்.ஜே சூர்யா என்றால் உங்கள்  நினைவிற்கு வருவது இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவா அல்லது நடிகர் எஸ்.ஜே சூர்யாவா என்ற குழப்பம் வரும். எப்படியாக இருந்தாலும் இரண்டிலும் வெற்றிபெற்று மக்கள் மனதில் அவர் இடம்பிடித்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இன்று அவருக்கு 55 ஆவது பிறந்தநாள். சில அபூர்வமான தகவல்களை நாம் எஸ்.ஜே சூர்யாவைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நம்மைப்போல் மிக சாதாரண மனிதர் ஒருவர் தனது லட்சியத்திற்காக உறுதியான நின்று இன்று வெற்றிபெற்று நிற்கும் ஒரு நபரின் கதையே இது.


ஹோட்டலில் சர்வராக வேலை:


எஸ்.ஜே சூர்யாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருந்திருக்கிறது. ஆமாம் ஒரு நடிகனாக ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்திருக்கிறது. இதற்காக சென்னை வந்து பணத்திற்காக கிடைத்த வேலைகள் எல்லாம் செய்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. அதில் அவர் அடிக்கடி நினைவு கூறும் ஒரு வேலை என்றால் ஹோட்டலில் சர்வராக தான் வேலைப் பார்த்ததை. தனது வாழ்நாளில் எந்த காலத்தை நினைவுகூர்ந்தாலும் இந்தக் கதைக்கு வந்து சேர்ந்துவிடுவார் எஸ்.ஜே.சூர்யா


மூக்கை சுற்றி காதைத் தொடுவது


சினிமாவில் எப்படியாவது நடிகனாகிவிட வேண்டும் என்று நினைத்த சூர்யா ஒரு உண்மையை உணர்ந்துகொண்டார். ஒருவர் நடிகனாக வேண்டும் என்றால் ஒன்று அவரை நம்பி பணம் முதலீடு செய்ய தயாரிப்பாளர் முன்வரவேண்டும் இல்லையென்றால் தானே தயாரித்து அதில் நடிக்க வேண்டும். இந்த இரண்டும் அவரிடம் இல்லை. இதனால் ஒரு முடிவுக்கு வந்தார் அவர் அது என்னத் தெரியுமா. ஒரு நடிகராவதை விட இயக்குநராவது எளிது. எப்படியாவது ஒரு இயக்குநராகி அதில் ஒரு நல்ல இயக்குநராக உருவெடுத்து தானே பணம் முதலீடு செய்து ஒரு படத்திலாவது கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதன் விளைவாகதான் குஷி, வாலி போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவானார் எஸ்.ஜே.சூர்யா.


நியூ 


இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கொஞ்சம் பணம் சேர்ந்தப்பின் தனது நீண்ட  நாள் ஆசையை நிறைவேற்றத் திட்டமிட்டார். தானே எழுதி தானே இயக்கி தானே கதாநாயகனாக நடித்து தானே தயாரித்து ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில் அவர் இதுவரை சம்பாரித்த அனைத்தையுமே செலவிட இருந்தார் அவர். ஒரு வேளை இந்தப் படம் தோல்வியடைந்தால் தன்னிடம் உள்ள எல்லாவற்றையுமே அவர் இழக்க நேரிடலாம். அப்போது தனக்கு தானே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டுக்கொண்டார் எஸ்.ஜே.சூர்யா. இது எல்லாம் போய் மீண்டும் அதே ஹோட்டலில் ஒரு சாதாரனமான சர்வராக தன்னால் வேலை செய்ய முடியுமா என்று. அவரது மனசாட்சி முடியும் என்று பதில் சொன்னது. தனது எல்லாவற்றையும் பணயம் வைத்து நியூ படத்தை இயக்கி அதை தயாரித்து அதில் நடித்து வெளியிட்டார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது, ஒரு நடிகனாக வேண்டும் என்கிற அவரது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.


மக்கள் ரசிக்கும் இயக்குநர் , நடிகர்


இன்று அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் ஒரு இயக்குநராகவும், ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. வேறு ஒருவர் நடித்திருந்தால் கவணிக்கப்படாமலே போயிருக்கக் கூடிய எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்து அவற்றை தனித்துவமானதாக மாற்றியிருக்கிறார். ஒரு ஹீரோவாக மட்டுமில்லை வில்லனாகவும் கூட.


கமலுக்கு வில்லன்


தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார் நமது எஸ்.ஜே.சூர்யா. அவருக்கு ஏபிபி நாடு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!